'எங்கடா உங்க மந்திரி': போஸ்டரால் மன உளைச்சலில் கரூர் தி.மு.க.,

3

கரூர் : கரூரில் உள்ள தியேட்டரில், ஒட்டப்பட்ட போஸ்டரில், எங்கடா உங்க மந்திரி என்ற தலைப்பால் மன உளைச்சலுக்கு ஆளான தி.மு.க.,வினர், அதை மறைத்ததாக பா.ஜ.,வினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.


அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில், போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக ஏராளமானோரிடம், லஞ்சம் பெற்று முறைகேட்டில் ஈடுபட்டதாக, அமைச்சராக இருந்த கரூரைச் சேர்ந்த செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார்கள் எழுந்தன.

ராஜினாமா



இதுகுறித்து வழக்கு பதிந்த அமலாக்கத் துறையினர், 2023 ஜூனில் அவரை கைது செய்தனர். பின், உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியது, சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி, மின் துறை அமைச்சராக பதவியேற்றார்.


இதற்கு எதிராக வித்யா குமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய, உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, செந்தில் பாலாஜி, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.


இதற்கிடையில், கரூரில் உள்ள லட்சுமிராம் தியேட்டரில், எங்கடா உங்க மந்திரி என்ற தெலுங்கு டப்பிங் படம் திரையிடப்பட்டிருந்தது. இந்த படத்தின் தலைப்பை பார்த்து தி.மு.க.,வினர் மன உளைச்சலுக்கு ஆளாகினர். உடனடியாக, போஸ்டரில் படத்தின் தலைப்பை பேப்பர் ஒட்டி மறைத்தனர்.

பரவிய சர்ச்சை



இதற்கு, கரூர் பா.ஜ.,வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, கரூரில் வெளியிடப்பட்ட எங்கடா உங்க மந்திரி படத்தின் தலைப்பு குறித்த சர்ச்சை வேகமாக பரவியது.


இந்நிலையில், அரசியல் ரீதியில் படம் குறித்து சர்ச்சை எழுந்துள்ளதால், தியேட்டர் நிர்வாகம் படத்தை மாற்றி விட்டது. நடிகர் அஜித் நடித்த வீரம் படத்தை திரையிட்டுள்ளனர். ஆனாலும், கரூரில் படம் குறித்த சர்ச்சை அரசியல் ரீதியில் தொடர்கிறது.

Advertisement