தமிழகத்தில் மே 6ல் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

1

சென்னை: தமிழகத்தில் மே 6ம் தேதி 5 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.



இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (மே 2) முதல் மே 5ம் தேதி வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் பலத்த காற்றுடன் லேசனது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


வரும் மே 6ம் தேதி நீலகிரி, கோவை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. வரும் மே 8ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை தொடரும். தமிழகத்தில் இன்று முதல் மே 4ம் தேதி வரை ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்ப நிலை, 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement