மணல் குவாரிக்கு எதிர்ப்பு கிராம மக்கள் போராட்டம்

பரங்கிப்பேட்டை: புதுச்சத்திரம் அருகே தனியார் சவுடு மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.

புதுச்சத்திரம் அடுத்த அத்தியாநல்லுார் கிராமத்தில், தனியார் சவுடு மணல் குவாரி இயங்கி வருகிறது. இங்கு, விதிமுறைகளை மீறி அதிகளவு மணல் எடுக்கப்படுவதாக கூறி, கிராம மக்கள் மணல் குவாரியை மூட வேண்டும் என தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனால், சவுடு மணல் குவாரி கடந்த ஒரு மாதமாக இயங்கவில்லை. இந்நிலையில் நேற்று காலை மீண்டும் சவுடு மணல் குவாரி இயங்கியதாக தகவல் கிடைத்த நிலையில், அப்பகுதி மக்கள் 70க்கும் மேற்பட்டோர் மணல் குவாரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.

இதனால், குவாரியில் இருந்து லாரியில் மணல் ஏற்றப்படுவது நிறுத்தப்பட்டது. மாலை ௬.௩௦ மணிக்கு கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Advertisement