துவரம் பருப்பு கொள்முதல் மே இறுதி வரை நீட்டிப்பு

பெங்களூரு: ''துவரம் பருப்பு ஆதரவு விலையின் கொள்முதல் காலம், இம்மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது,'' என வேளாண் சந்தை துறை அமைச்சர் சிவானந்த பாட்டீல் தெரிவித்தார்.

பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

மத்திய அரசு, ஒரு டன் துவரம் பருப்புக்கு 7,550 ரூபாய் விலை நிர்ணயித்தது. இதை அதிகரிக்க வேண்டும் என்று விவசாயிகள், முதல்வரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதை ஏற்ற முதல்வர் சித்தராமையா, 450 ரூபாய் ஊக்கத்தொகை அறிவித்தார். இதன் மூலம் ஒரு டன் துவரம் பருப்பு, 8,000 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. மே 1ம் தேதி (நேற்று) முதல் துவரம் பருப்பு கொள்முதல் காலம் முடிவடைந்து உள்ளது.

மத்திய அரசு குறிப்பிட்ட 3.06 லட்சம் டன் துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்படவில்லை. இதுவரை 1.83 லட்சம் டன் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. கொள்முதல் காலத்தை நீட்டிக்கும்படி மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதை ஏற்ற மத்திய அரசும், இம்மாதம் இறுதி வரை நீட்டிக்க ஒப்புதல் அளித்துள்ளது. எனவே இம்மாதம் இறுதி வரை அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement