பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் சுட்டு கொல்ல விஸ்வநாத் ஆவேசம்

மைசூரு: ''இந்தியாவில் இருந்து கொண்டு, பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் போட்டவரை, சுட்டு கொல்ல வேண்டும்,'' என பா.ஜ., - எம்.எல்.சி., விஸ்வநாத் வலியுறுத்தினார்.

மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

தற்போது யுத்த சூழ்நிலை உருவாகியுள்ளது. அரசியலை ஓரங்கட்டி ஒட்டுமொத்த இந்தியாவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு பக்கபலமாக நிற்க வேண்டும்.

'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்போரை தேசத்துரோகிகள் என, அறிவித்து தண்டனை விதிக்க வேண்டும். நமது நாட்டின் சோற்றை தின்று, நமது நீரை குடித்து வாழ்வோர், எதிரிகளுக்கு கோஷம் போடுவதை ஏற்க முடியாது. இந்தியாவில் இருந்து கொண்டு, பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் போட்டவரை, சுட்டு கொல்ல வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்புடன், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த, மத்திய அரசு முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது.

அனைத்து ஜாதிகளின் தலைவர்களும் வரவேற்றுள்ளனர். மாநிலத்தில் நடத்தப்பட்ட ஜாதிவாரி ஆய்வறிக்கையை, மாநில அரசு அதிகாரப்பூர்வமாக பகிரங்கப்படுத்த வேண்டும்.

மத்திய அரசு நடத்தும் ஜாதி கணக்கெடுப்பு, நம்பிக்கைக்கு உரியதாக இருக்கும். முதல்வர் சித்தராமையா, தனக்கு வேண்டப்பட்டவர்களை அருகில் அமர்த்தி கொண்டு, அறிக்கை தயாரித்துள்ளார். இதனால் குளறுபடிகள் ஏற்பட்டன. காந்தராஜு ஆணைய அறிக்கையின் மூல பிரதியே இல்லாமல், எப்படி அறிக்கை தயாரித்தனர்.

கர்நாடக ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை, அரசியல் மயமானது. ஆய்வு குழுவில் வல்லுநர் அல்லாதவர்களை சேர்த்து கொண்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement