செக் போஸ்ட்

நுாறாண்டுகள் கண்டிறாத ஆறு சாலைகளை இணைக்கும் ஐந்து விளக்கு சதுக்கத்தை புதுப்பிக்க 75 'எல்' செலவானதாக தகவலை பரப்பினாங்க. அது நிஜம் தானா. அப்படியென்ன செலவாகியிருக்கும்னு, தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விபரம் கேட்டவருக்கு 26 'எல்'தான்னு நிதி ஒதுக்கீடு காட்டுது. மீதி, '49 எல்' யாருடைய பணம்னு சர்ச்சை ஓடிக்கொண்டிருக்குது.

சும்மா 'பில்டப்' காட்டுறதையே பெருமையென சிலர் சொல்லி திரியிறாங்க. இதையே வழக்கமா ஆக்கிட்டாங்க. உதாரணமாக, புதிய கட்டடங்கள் 10 'சி' செலவழிச்சதா சொல்றாங்க. அதில் 50 பர்சன்ட் வேலையாவது நடந்திருக்குதா என்பது தான் கேள்வி.

வேலை என்னவோ 10 சி தான். ஆனால்கமிஷனை எந்த கணக்கில் காட்றது என்பதே கான்ட்ராக்ட்காரர்களின் பதிலா இருக்குது.

பூங்கா அபிவிருத்திக்கு பல லட்சம் கணக்கில் காட்டினாலும், இதுக்கு போயி இவ்வளவு தொகையான்னு விபரம் அறிந்தவங்க கேள்வி எழுப்புறாங்க.

கண் கெட்ட பின், சூரிய நமஸ்காரம் செய்வது போல, எல்லா பணிகளும் முடிந்த பிறகு தான் ஞானோதயம் வருவது போல் சட்டப் பிதா பவன் கட்டும் வரை உறக்கத்தில் இருந்து விட்டு, திறக்க வேண்டிய கட்டத்தில், அது முறைகேடாக கட்டப்பட்டதென, திறக்க விடாமல் நிறுத்திட்டாங்க.

இது மட்டுமா, 'ஏபி' மாநில எல்லையில் கிரானைட் தொழிலுக்காகவே, கோல்டு சிட்டி தொகுதியின் ஏபிஎம்சி யார்டு கட்டும் வேலை ஒரு ஆண்டா நடந்து வருவதை, மீடியாக்கள் படம் பிடித்து காட்டினாங்க.

பல லோடு கிரானைட் கற்கள், மாநிலம் விட்டு சென்றதை தடுக்கவில்லை. ஏபிஎம்சி பணிகள் முடிவடையும் கட்டத்தில் இருக்கும் போது, விமர்சனம் செய்வது ஏன் என தெரியவில்லை.

அடிப்படை வசதிகள் செய்வது பற்றி, வாய் திறக்காமல் இருந்து விட்டு, தேர்தல் நெருங்கி வருவதால் நானும் இருக்கிறேன்னு அடையாளம் காட்ட சிலரு கெளம்பி இருக்காங்க.

ஒரு மாதத்திற்கு முன்பு குடிநீருக்காக சிறப்பு கூட்டம் கூட்டுவதாக, கோல்டு சிட்டி அசெம்பிளிக்காரர் தெரிவித்தாரு. கோடைக்காலம் முடிந்தாலும் கூட அந்த கூட்டம் கூட்டுவாங்களா. பிரச்னையை தீர்ப்பாங்களான்னு தெரியலை.

கோல்டு சிட்டியில் விலை கொடுத்து வாங்கும் டேங்கர் தண்ணீர் தான் உயிர் வாழ உதவுகிறது. இதனை பொறுப்பானவங்க கண்டுக்கலையே. சுத்திகரிக்கப்படாத போர்வெல் நீர்தான் பயன்பாட்டில் இருக்குது. இதனால் பல்வேறு நோய்கள் தாக்குவதாக அறிவியல் அறிந்தவங்க சொன்னாலும், மக்கள் பிரதிநிதிகளுக்கு எங்க புரிய போகுது. கோல்டு சிட்டியில் டயாலிசிஸ் நோயாளிகள் அதிகமாவதற்கு, தரமற்ற குடிநீர் தான் முக்கிய காரணமா இருக்குன்னு பலரது கருத்தாக இருக்குது.

ரா.பேட்டை பஸ் நிலையத்தில் பல லட்சம் செலவுல போர்வெல் ஏற்படுத்தி, அதன் பக்கத்தில சுத்திகரிப்பு நிலையம் அமைச்சாங்க. ஆனால் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இதுவரை திறக்கவில்லை. மக்கள் வரிப்பணம்னு வேஸ்ட் ஆகணுமா.

மாடி மேல் மாடி கட்டி, கோடி மேல கோடி சேர்க்கும் சீமான்கள் பொன்னான நகரிலும் இல்லேன்னு சொல்ல முடியாது. இவ்வளவு எப்படி வந்ததுன்னு கேட்டா, மாமனார் தந்த சீதனம்னு சொல்லி சமாளிக்கிறாங்களாம்.

முனிசியில் கிடைத்ததை சுருட்டுவதே ஒரு சிலரின் திருவிளையாடல்னு லேசா வெளிச்சத்திற்கு வந்திருக்குது. முனிசி.,க்கு சொந்தமான மனைகளை, பட்டா தயாரிக்கும் வேலை ஆபீசில் நடக்குதோ இல்லையோ, சிலரோட வீட்டுக்குள்ளேயே நடத்துறாங்களாம். இதுல எத்தன பேரு பாதிக்க போறாங்களோ.

போலி பட்டா தயாரிப்பு

Advertisement