12,692 துாய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம் தொழிலாளர் தின பரிசு வழங்கிய காங்., அரசு

பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சியின் 12,692 துாய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து, அதற்கான கடிதத்தை முதல்வர் சித்தராமையா நேற்று வழங்கினார்.

பெங்களூரு மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் 15,400 துாய்மை பணியாளர்களில் 12,692 பேரை, பணி நிரந்தரம் செய்ய போவதாக, கடந்த மாதம் அரசு அறிவித்தது.

ஏற்கனவே அறிவித்தது போல, தொழிலாளர் தினமான நேற்று 12,692 ஊழியர்களுக்கு பணி நிரந்தர உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி, பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நடந்தது.

முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, அமைச்சர்கள் மஹாதேவப்பா, முனியப்பா உள்ளிட்டோர், துாய்மை பணியாளர்களுக்கு பணி நிரந்தர உத்தரவை வழங்கினர்.

ரூ.39,000 சம்பளம்



நிகழ்ச்சியில் சித்தராமையா பேசியதாவது:

நான் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது, துாய்மை பணியாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யும்படி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்ட களத்திற்கு சென்று, என் ஆதரவை தெரிவித்தேன். பா.ஜ., அரசு உங்களை பணி நிரந்தரம் செய்யவில்லை என்றால், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் செய்வோம் என்று கூறி இருந்தேன். அந்த வாக்குறுதியை இப்போது காப்பாற்றி உள்ளோம்.

மாநிலத்தில் ஒப்பந்த அடிப்படையில் அரசு வேலை செய்வோர் 38,000 பேர் உள்ளனர். அவர்களை படிப்படியாக நிரந்தரமாக்குவோம். மாநகராட்சியின் குப்பை வண்டி ஓட்டுநர்கள், உதவியாளர்களும் பணி நிரந்தரம் செய்யும் பட்டியலில் இருந்து விடுபட்டு உள்ளனர். அவர்கள் பணியையும் நிரந்தரம் ஆக்குவோம்.

எங்கள் கட்சியும், அரசும் ஏழைகள், பிற்படுத்தப்பட்டோருக்கு ஆதரவாக தான் எப்போதும் நிற்கின்றன. துாய்மை பணியாளர்களுக்கு முன்பு 7,000 ரூபாய் தான் சம்பளம் கிடைத்தது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் 18,000 ரூபாய் கொடுத்தோம். இப்போது ஒருபடி மேலே சென்று 12,692 பேரை பணி நிரந்தரம் செய்து உள்ளோம்.

மாநகராட்சி கமிஷனருக்கு கிடைக்கும் மரியாதை, மாநகராட்சியில் பணி செய்வோருக்கும் கிடைக்க வேண்டும். பணி நிரந்தரம் செய்யப்பட்டவர்களுக்கு இனி மாத சம்பளமாக 39,000 ரூபாய் கிடைக்கும்.

துாய்மையில் தெய்வத்தை காண வேண்டும் என்று, மகாத்மா காந்தி கூறினார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பசவண்ணரும் பல தத்துவங்களை நமக்கு கூறி உள்ளார். அரசு ஊழியர்களுக்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. 1,000 அரசு ஊழியர்களை வெளிநாட்டிற்கு சுற்றுலா அனுப்பும் திட்டம் உள்ளது. சமத்துவ சமூகத்தை உருவாக்குவது அரசின் நோக்கம்.

இவ்வாறு அவர் பேசினார்.

மறக்க மாட்டோம்



துணை முதல்வர் சிவகுமார் பேசியதாவது:

காங்கிரஸ் அரசு, துாய்மை பணியாளர்களை துாய்மையின் துாதர்களாக கருதுகிறது. நீங்கள் தான் சமூக ஆரோக்கியத்தின் பாதுகாவலர்கள்.

பெங்களூரு நகரை அழகான மாற்றுவதற்கு நீங்கள் இரவு, பகலாக சேவை செய்கிறீர்கள். நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்த போது, உங்களுக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றி விட்டோம்.

உங்கள் குழந்தைகள் நன்கு படித்து இந்த சமூகத்தில் முக்கிய பதவிகள் வகிக்கும் திறன் கொண்டவர்களாக மாற வேண்டும். இன்று முதல் நீங்களும் அரசு ஊழியர்கள்.

உங்களுடன் நாங்கள் எப்போதும் இருப்போம். உங்களுக்காக பட்ஜெட்டில் 600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. யாரிடம் இருந்தும் 1 ரூபாய் கூட லஞ்சம் வாங்காமல், பணி நிரந்தரம் செய்து இருக்கிறோம். உங்களை பணி நிரந்தரம் செய்வதில் பெங்களூரு எம்.எல்.ஏ.,க்களுக்கும் பங்கு உள்ளது.

அவர்கள் எனக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்தனர். கொரோனா நேரத்தில் போர் வீரனை போல, உயிரை பணயம் வைத்து துாய்மை பணியாளர்கள் பணி செய்தனர். இதை நாங்கள் மறக்கவே மாட்டோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement