ஹூப்பள்ளி என்கவுன்டரில் மனித உரிமை மீறல் தலைமை செயலர், டி.ஜி.பி.,க்கு ஆணையம் நோட்டீஸ்

பெங்களூரு: ஹூப்பள்ளியில் 5 வயது சிறுமியை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவரை, போலீசார் என்கவுன்டரில் சுட்டு கொன்றனர். இவ்விஷயத்தில் நான்கு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும்படி, தேசிய மனித உரிமை ஆணையம், மாநில தலைமை செயலர், போலீஸ் டி.ஜி.பி.,க்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

தாக்குதல்



தார்வாட் மாவட்டம் ஹூப்பள்ளியில், கடந்த ஏப்ரல் மாதத்தில், 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற ரித்தேஷ் குமாரை பிடிக்க, போலீசார் சென்றனர். அப்போது போலீசார் மீது தாக்குதல் நடத்தியதால், தற்காப்புக்காக சுட்டதில், அவர் உயிரிழந்தார்.

என்கவுன்டரில் சந்தேகம் இருப்பதாக, ஊடகங்களிலும், பல அமைப்புகளும் கருத்து தெரிவித்திருந்தன. ஊடகங்களில் வந்த செய்திகளை அடிப்படையாக கொண்டு, தேசிய மனித உரிமைகள் ஆணையம், தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது.

கடந்த மாதம் ஆணைய தலைவர் ஷியாம் பட், சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தார்; போலீசாரிடம் விசாரித்தார். இது தொடர்பான அறிக்கை, இரண்டு மாதங்களில், மாநில அரசுக்கு சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

நோட்டீஸ்



இந்நிலையில், மாநில தலைமை செயலருக்கும், மாநில போலீஸ் டி.ஜி.பி.,க்கும், மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

அதில் குறிப்பிட்டு உள்ளதாவது:

சம்பவம் தொடர்பான அறிக்கையை, நான்கு வாரங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இந்த அறிக்கையில், உயிரிழந்த 5 வயது சிறுமி, என்கவுன்டரில் கொல்லப்பட்ட ரித்தேஷ் குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை, நீதிமன்றத்தில் உள்ள விசாரணை அடங்கிய தகவல்கள் இருக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட சிறுமி, குற்றம் சாட்டப்பட்டவர் கொல்லப்பட்டது என இரு வழக்குகளிலும் மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளது, ஊடக அறிக்கைகள் மூலம் மேலோட்டமாக தெரிகிறது.

இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளது.

நீதிமன்றம், ரித்தேஷ் குமாரின் உடலை தகனம் செய்ய அனுமதி அளித்துள்ளது. ஆனால், அவரின் உறவினர்கள் யாரும் வராததால், இன்னும் சில நாட்கள், கே.எம்.சி.ஆர்., மருத்துவமனையில் ரித்தேஷ் குமார் உடலை வைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Advertisement