மருத்துவர்களை போன்று ஆசிரியர்களுக்கும்   பணி பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு தீர்மானம்

ராமநாதபுரம்: மருத்துவர்களைப் போன்று ஆசிரியர்களுக்கும் பணி பாதுகாப்பு சட்டத்தை அரசு இயற்ற வேண்டும் என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாநிலத் தலைவர் தங்கவேலு தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட், பொருளாளர் நாராயணன் முன்னிலை வகித்தனர்.

இதில் போப் பிரான்சிஸ் மறைவு, ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதலில் பலியான சுற்றுலா பயணிகள் மற்றும் கூட்டமைப்பு நிர்வாகிகள் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தனர்.

புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் டி.இ.டி., தகுதி தேர்வு தேவையில்லை என்ற கொள்கை முடிவை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்து விரைவில் பதவி உயர்வு வழங்க வேண்டும்.

அனைத்து உயர்நிலை பள்ளிகளிலும் பட்டதாரி ஆசிரியர் பணிடத்தை உறுதி செய்ய வேண்டும். பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும். மருத்துவர்களை போன்று ஆசிரியர்களுக்கும் பணி பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும்.

புதிய மருத்துவகாப்பீட்டு திட்டத்தில் 100 சதவீதம் கட்டணமில்லா சிகிச்சை அளிக்க வேண்டும் உள்ளிட்ட 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ராமநாதபுரம் மாவட்டத்தலைவர் ராமச்சந்திரன், செயலாளர் பீட்டர் சகாயராஜ், பொருளாளர் பாலமுருகன் உட்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். மாநில துணைப் பொதுச்செயலாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.

Advertisement