திறப்பு விழா முடிந்தும் பூட்டியுள்ள ரேஷன் கடை

திருவாடானை: திருவாடானை அருகே தினையத்துாரில் புதிய ரேஷன் கடை கட்டடம் திறப்பு விழா முடிந்தும் செயல்படாமல் பூட்டி கிடக்கிறது.

திருவாடானை அருகே தினையத்துாரில் ரேஷன் கடை வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. சொந்த கட்டடம் கட்ட அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால் ரூ.12 லட்சத்து 70 ஆயிரத்தில் புதிய கட்டடம் கட்டப்பட்டது. கட்டடத்தை திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ. கருமாணிக்கம் நான்கு மாதங்களுக்கு முன்பு திறந்து வைத்தார். ஆனால் அக்கட்டடத்தில் இதுவரை ரேஷன் கடை செயல்படவில்லை.

கிராமத்தை சேர்ந்த சண்முகநாதன் கூறியதாவது: புதிய கட்டடம் திறக்கப்பட்டு நான்கு மாதங்கள் ஆகியும் மின் விநியோகம் இல்லாமல் இயங்காமல் உள்ளது. வாடகை கட்டடத்தில் இயங்குவதால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே புதிய கட்டடத்தில் ரேஷன் கடை இயங்க அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Advertisement