சிவகங்கையில் 4 மாதங்களில் '‛குண்டாசில்' 57 பேருக்கு சிறை   

சிவகங்கை: சட்டம் ஒழுங்கை பாதுகாக்க மாநில அளவில் அதிகபட்சமாக கடந்த 4 மாதத்தில் மட்டுமே சிவகங்கையில் 57 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் கொலை, வழிப்பறி, கஞ்சா விற்பனை, பாலியல் தொந்தரவை தடுக்கும் நோக்கில் எஸ்.பி., ஆஷிஷ் ராவத் தலைமையில் டி.எஸ்.பி., க்கள் மற்றும் போலீசார் முனைப்புடன் செயலாற்றி வருகின்றனர்.

குறிப்பாக கொலை, வழிப்பறி, கஞ்சா விற்பனையை முற்றிலும் தடுக்கும் நோக்கில், கொலை, கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோரை 'குண்டாசில்' சிறையில் அடைத்து வருகின்றனர்.

இம்மாவட்டத்தில் 2024ம் ஆண்டில் 56 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தற்போது புதிதாக வந்த எஸ்.பி., ஆஷிஷ் ராவத் எஸ்.பி., அலுவலகத்தில் தனியாக ஒரு பிரிவை ஏற்படுத்தி தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கும் பணிகளை வேகப்படுத்தினார்.

4 மாதத்தில் 57 'குண்டாஸ்'



2025ம் ஆண்டில் ஜன., முதல் ஏப்.,ல் வரை 4 மாதங்களில் மட்டுமே 'குண்டாசில்' சிறை சென்றவர்களின் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது.

2025 ஜன., முதல் ஏப்., வரை 'சைபர் கிரைம்' வழக்கில் - 1, போக்சோ வழக்கில் - 8, கஞ்சா வழக்கில் - 3, கொலை, வழிப்பறி, ரவுடியிசம் போன்ற சம்பவங்களில் ஈடுபட்ட 45 பேர் என ஒட்டு மொத்தமாக 4 மாதத்தில் 57 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement