சிவகங்கை 'ஸ்பைசஸ் பூங்கா' முடக்கம் 12 ஆண்டை கடந்தும் வளர்ச்சியில் இழுபறி 

சிவகங்கை: சிவகங்கை அருகே முத்துப்பட்டியில் அமைந்துள்ள 'ஸ்பைசஸ்' பூங்கா திறந்து 12 ஆண்டை கடந்த நிலையிலும் தொழில் முனைவோர் அதிகளவில் முன்வராததால், பூங்கா செயல்பாடின்றி கிடக்கிறது.

சிவகங்கை அருகே முத்துப்பட்டியில் மானாகுடி ரோட்டில் 100 ஏக்கரில் 'ஸ்பைசஸ் பூங்கா' 2013ல் துவக்கப்பட்டது.

இங்கு நிறுவப்பட்டுள்ள 5 கோடவுன்களில் (தலா 50 டன் கொள்ளளவு), அரவை இயந்திரங்களை கொண்டு சிவகங்கை, ராமநாதபுரத்தில் விளையும் மிளகாயை அரைத்து வர்த்தகம் செய்வது. மேலும் மஞ்சளை வாங்கி அரைத்து ஏற்றுமதி செய்யும் நோக்கில் திறக்கப்பட்டது.

தொழில் நிறுவனங்கள் துவக்குவதற்காக தலா ஒரு ஏக்கர் பரப்பளவில் 40 பிளாட்கள் அமைத்துள்ளனர். ஒரு பிளாட்டை தொழில் முனைவோருக்கு 30 ஆண்டு குத்தகையில் ரூ.5 லட்சத்திற்கு வழங்குகின்றனர்.

இந்த பிளாட்களை வாங்கி தொழில் செய்வோருக்கு தேவையான ஏற்றுமதி வசதி, சரக்கு வாகனங்கள் வந்து செல்ல ரோடு, தண்ணீர், மின்வசதியை 'ஸ்பைசஸ்' வாரியம் ஏற்படுத்தி தர வேண்டும்.

தற்போது இங்கு மிளகாய் அரைத்து பாக்கெட்டாக ஏற்றுமதி செய்தல், பயோ பெர்டிலைசர் உற்பத்தி உள்ளிட்ட சில நிறுவனங்கள் மட்டுமே செயல்படுகின்றன.

40 பிளாட்களில் 7 பிளாட்களை மட்டுமே தொழில் முனைவோர் வாங்கியுள்ளனர். பூங்கா துவக்கி 12 ஆண்டை கடந்த நிலையிலும் இங்கு தொழில் துவங்க தொழில் முனைவோர், ஏற்றுமதியாளர்கள் அதிகளவில் முன்வரவில்லை. சிவகங்கை ஸ்பைசஸ் பூங்கா மேலாளர் மோகன் கூறியதாவது:

தொழில் முனைவோர்களை அதிகளவில் ஈர்க்கும் விதமாக போதிய மின்வசதிக்கு கூடுதலாக 230 கே.வி., டிரான்ஸ்பார்மர் பொருத்தியுள்ளோம்.

முத்துப்பட்டி விலக்கில் இருந்து 'ஸ்பைசஸ்' பூங்கா வரை சரக்கு லாரிகள் வந்து செல்ல 20 அடி அகலத்திற்கு ரோடு அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம்.

பிளாட்களை வாங்கி தொழில் துவங்குவோருக்கு, உடனுக்குடன் போதிய தண்ணீர் வசதியை செய்து தருகிறோம்.

வங்கிகள் மூலம் கடனுதவி பெற்றுத்தருவதற்கான நடவடிக்கையும் எடுக்கிறோம். தொழில் முனைவோர் முன்வந்து, இங்கு தொழில் துவங்கினால் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும், என்றார்.

Advertisement