தொடங்கியது அ.தி.மு.க. செயற்குழு கூட்டம்: 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

சென்னை; சென்னையில் அ.தி.மு.க., செயற்குழு கூட்டம் இன்று (மே 2) நடைபெற்றது. இதில் மத்திய அரசை பாராட்டியும், தி.மு.க., அரசை கண்டித்தும் என மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க., செயற்குழு கூட்டம் இன்று (மே 2) நடைபெற்றது. பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்த பிறகு நடைபெற்ற முதல் செயற்குழு கூட்டமாகும்.


கூட்டத்திற்கு வந்த பொதுச் செயலாளர் இ.பி.எஸ்.,க்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கூட்டத்தில் மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


கூட்டத்தில் வெற்றிக் கூட்டணியின் தொடக்கமாக பா.ஜ.,வுடன் கூட்டணியை அமைத்தும், தி.மு.க., என்கிற பொது எதிரியை வீழ்த்துவதற்கு ஒத்த கருத்துடைய அரசியல் கட்சிகளை கூட்டணியில் இடம்பெற செய்து மெகா கூட்டணியை அமைக்க வியூகம் வகுத்து வரும் இ.பி.எஸ்.க்கு பாராட்டு தெரிவித்து முதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


2021 தேர்தலில் 525 வாக்குறுதிகளை அளித்து நிறைவேற்ற முடியாமல் தவறான தகவல்களை அளித்தும், மக்களின் கோபத்தை மறைக்க மொழிக் கொள்கை, கல்விக் கொள்கை, கச்சத் தீவு மீட்பு, தொகுதி மறுவரையறை, மாநில சுயாட்சி நாடகம் ஆடும் தி.மு.க., அரசை கண்டித்தும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


மத்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவித்ததை மகிழ்ச்சியுடன் வரவேற்றும் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


செயற்குழுவில் அண்மைக்காலமாக கட்சி நிகழ்ச்சிகளை புறக்கணித்து வந்த மாஜி அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார். அவருடன் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட மற்ற மாஜி அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

Advertisement