கள்ளக்காதலியின் மகளுக்காக இரண்டு கொலை செய்த முதியவர்

கோவை:கோவை, காந்தி மாநகரை சேர்ந்தவர் தியாகராஜன், 69; மனைவியை பிரிந்து வாழ்கிறார். கணவரை பிரிந்து வாழும் கோமதி என்ற பெண்ணுடன், இவருக்கு தொடர்பு உள்ளது.

கோமதி மகள் சாரதாவுக்கு, குணவேல் என்பவருடன் திருமணமானது. தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டதால், தியாகராஜன் சமாதானம் செய்து வந்துள்ளார்.

இதனால், தியாகராஜனுக்கும், குணவேலுக்கும் தகராறு ஏற்பட்டது. தியாகராஜன் தாக்கியதில், குணவேல் உயிரிழந்தார். இந்த வழக்கில், ஆயுள் தண்டனை பெற்று, சிறை சென்ற தியாகராஜன், ஜாமினில் வெளியே வந்தார்.

தகராறு



இதற்கிடையே, சாரதா, வேலைக்காக துபாய் சென்றார். அங்கு டிராவல்ஸ் நடத்தி வரும், திருவாரூரை சேர்ந்த சிகாமணி, 47, என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது.

அவர், சாரதாவிடம், 6 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். பணத்தை திருப்பி கேட்டபோது, இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதால், சாரதா கோவை வந்தார்.

சாரதா, தாய் கோமதி, தியாகராஜன் ஆகியோர், சிகாமணியை கொல்ல திட்டமிட்டு, தியாகராஜனின் நண்பரான நெல்லை ரவுடி புதியவனை உதவிக்கு அழைத்தனர். ஏப்., 21ம் தேதி சிகாமணி, சாரதாவை சமாதானப்படுத்த கோவை வந்தார்.

அப்போது, சாரதா வீட்டார், விருந்து வைத்து சிகாமணியை கவனித்தனர். பின், தியாகராஜன், சிகாமணி, புதியவன் மது அருந்தினர். அப்போது, சிகாமணியின் மதுவில், துாக்க மாத்திரைகளை கலந்து கொடுத்தனர்.

மது குடித்த சில நிமிடங்களில் சிகாமணி உயிரிழந்தார். தியாகராஜன், புதியவன், சாரதா, சிகாமணியின் உடலை காரில் கொண்டு சென்று, பொன்னமராவதியில் வீசினர். அங்கிருந்து திருச்சி சென்று, சாரதாவை விமானத்தில் துபாய்க்கு அனுப்பினர்.

இதற்கிடையில், சிகாமணியை தொடர்பு கொள்ள முடியாததால், அவரது மனைவி துபாயில் உள்ள சிகாமணியின் அலுவலகத்தை தொடர்பு கொண்டபோது, அவர் கோவை சென்றிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

நடவடிக்கை



கணவரை தேடி கோவை வந்த சிகாமணியின் மனைவி, பீளமேடு போலீசில் புகார் அளித்தார். போலீசார், 'ஆள் மாயம்' என வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், தியாகராஜன் நேற்று முன்தினம், கோவை கோர்ட்டில், சிகாமணியை கொன்றதாக சரணடைந்தார்.

இதையடுத்து, வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார், தியாகராஜனை சிறையில் அடைத்தனர்.

உடந்தையாக இருந்த சாரதா, புதியவன் உள்ளிட்டோரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Advertisement