கள்ள நோட்டு அச்சடித்த 'மாஜி' வி.சி., நிர்வாகிக்கு 'காப்பு'

ராமநத்தம்:கள்ள நோட்டு அச்சடித்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மாஜி வி.சி., நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

கடலுார் மாவட்டம், ராமநத்தம் அடுத்த அதர்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம், 39; வி.சி., கட்சியின் முன்னாள் நிர்வாகி. வேறு வழக்கு விசாரணைக்காக, அவரை தேடி மார்ச் 30ம் தேதி ராமநத்தம் போலீசார், நிலத்தில் உள்ள வீட்டிற்கு சென்றபோது, அங்கு செல்வம் உள்ளிட்ட 12 பேர் கொண்ட கும்பல் கள்ள நோட்டு அச்சடித்தது தெரிந்தது.

போலீசார் வழக்கு பதிந்து, அதே கிராமத்தை சேர்ந்த அரவிந்த், 30, கள்ளக்குறிச்சி மாவட்டம், பெருமங்கலம் சக்திவேல், 26, உட்பட ஆறு பேரை கைது செய்தனர். மேலும், கள்ள நோட்டு அச்சடிக்க பயன்படுத்திய பொருட்களை பறிமுதல் செய்தனர்.

தலைமறைவான முக்கிய குற்றவாளிகளை தனிப்படை போலீசார் தேடிவந்த நிலையில், கர்நாடகாவில் பதுங்கியிருந்த செல்வம், வல்லரசு, 25, ஆவட்டி பிரபு, 32, உள்ளிட்ட ஆறு பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Advertisement