கிருஷ்ணகிரியில் சூறாவளி காற்றுடன் மழை இருளில் மூழ்கியதால் சீரமைப்பு பணி தீவிரம்

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரியில் நேற்று முன்தினம் சூறாவளி காற்றுடன் பெய்த மழையில், சாய்ந்து விழுந்த மரங்கள், மின்கம்பங்களை அகற்றி நேற்று இரண்டாவது நாளாக சீரமைக்கும் பணியில் நகராட்சி மற்றும் மின்வாரிய அலுவலர்கள் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரியில் நேற்று முன்தினம் மாலை, சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதில், பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, வனத்துறை அலுவலகம், தாலுகா அலுவலகம், கோ ஆப்பரேட்டிவ் காலனி, பழைய பேட்டை, சிட்கோ தொழிற்பேட்டை மற்றும் நகரை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான மரக்கிளைகள் மின்கம்பிகள் மீது விழுந்தும், வேரோடு சாய்ந்தும், மின் கம்பங்களும் உடைந்தன.

இதனால் நேற்று முன்தினம் மாலை முதல் நகரில் மின் வினியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் இரவு முழுவதும் மின்தடையால் மக்கள் அவதியுற்றனர்.
பல இடங்களில் வீடுகள் முன் நிறுத்தியிருந்த வாகனங்கள்,ஷெட்டுகள், வீடுகளின் மாடி படிக்கட்டுகள் சேதமடைந்தன. நேற்று காலை மரங்கள் விழுந்து பாதிப்படைந்த கிருஷ்ணகிரி பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில், கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ,, நகர பொறுப்பாளர் அஸ்லம், நகராட்சி தலைவர் பரிதா நவாப் ஆகியோர் பார்வையிட்டனர்.
இது குறித்து மின்வாரிய அலுவலர்கள் கூறியதாவது: கிருஷ்ணகிரி நகரில், 4 இடங்களில் மரம் வேரோடு சாய்ந்தும், 100க்கும் மேற்பட்ட கிளைகளும் மின்கம்பிகள் மீது விழுந்துள்ளன. 10க்கும் மேற்பட்ட மின்கம்பங்களும், 2 டிரான்ஸ்பார்மர்களும் பழுதாகியுள்ளன. நேற்று முன்தினம் இரவு முதல் மின் வாரிய ஊழியர்கள், மற்றும் தற்காலிக பணியாளர்கள், 80 பேர் ஒவ்வொரு பகுதியாக மின் வினியோகத்தை சீரமைத்து வருகின்றனர். நகராட்சி பணியாளர்கள் உதவியோடு மரக்கிளைகள் வெட்டப்பட்டு நேற்று அதிகாலை முதல் ஒவ்வொரு பகுதியாக மின் சப்ளை வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement