சாம்பார் சுவையாக இல்லை மனைவியை கொன்ற கணவர்

பாகல்கோட்: சுவையாக சாம்பார் வைத்த தெரியவில்லை என்ற, சிறு காரணத்தால் மனைவியை கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டார்.

பாகல்கோட் மாவட்டம், முதோல் தாலுகாவின் முகளகோடா கிராமத்தில் வசிப்பவர் பீரப்பா, 21. இவரும், இதே கிராமத்தை சேர்ந்த சாக்ஷிதா, 19,வும், பரஸ்பரம் காதலித்தனர். திருமணம் செய்து கொள்ளவும் விரும்பினர். ஆனால் இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

திருமணம் செய்து வைக்கவும் சம்மதிக்கவில்லை. இதனால் காதலர்கள் வீட்டை விட்டு ஓடினர். இது குறித்து போலீஸ் நிலையத்தில், பெற்றோர் புகார் செய்தனர். போலீசாரும் விசாரணை நடத்தி, பீரப்பா, சாக்ஷிதாவை கண்டுபிடித்து புத்திமதி கூறி, பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

அதன்பின் இருவரின் குடும்பத்தினரும், மனம் மாறி சமீபத்தில் தாங்களே முன் நின்று திருமணம் செய்து வைத்தனர். தம்பதி தனிக்குடித்தனம் நடத்தினர். காதலித்து திருமணம் செய்து கொண்டும், இவர்களுக்குள் ஒற்றுமை இல்லை. மனைவிக்கு சுவையாக சமைக்க தெரியவில்லை என, பீரப்பா தகராறு செய்தார்.

நேற்று மதியம் சாக்ஷிதா, வீட்டில் சாம்பாரும், காய்கறி மசியலும் சமைத்திருந்தார். இவற்றை சாப்பிட்ட பீரப்பா, வழக்கம் போன்று நன்றாக இல்லை என்ற கோபத்தில், மனைவியை திட்டினார். கைகளால் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

தகவலறிந்து அங்கு வந்த முதோல் போலீசார், பீரப்பாவை கைது செய்தனர்.

Advertisement