அரசியலமைப்பில் திருத்தம் சித்தராமையா கோரிக்கை
மாண்டியா: ''இடஒதுக்கீட்டில் அதிகபட்ச வரம்பை நீக்கி அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும்,'' என முதல்வர் சித்தராமையா பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்து உள்ளார்.
கர்நாடகாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை அரசியலில் சூறாவளியை கிளப்பி உள்ளது. பல எதிர்ப்புகளுக்கு இடையில் அறிக்கை, அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், வெளியிடவில்லை. இந்த நிலையில், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதாக மத்திய அரசு சில நாட்களுக்கு முன் அறிவித்தது. இதனால், சித்தராமையா தலைமையிலான கர்நாடகா காங்கிரஸ் அரசு குழப்பத்தில் உள்ளது.
பெரும் குழப்பம்
ஏனெனில், பத்து ஆண்டுகளுக்கு முன்னால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பை அடிப்படையாக கொண்டு, அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. புதிதாக மத்திய அரசு கணக்கெடுப்பு நடத்தினால், நிச்சயம் புள்ளி விபரங்களில் பெரும் வித்தியாசம் ஏற்படும். இதனால் மாநில அரசுக்கு வீணாக அவப்பெயர் ஏற்படும் என பெரும் குழப்பத்தில் உள்ளனர்.
இந்நிலையில், ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து முதல்வர் சித்தராமையா மாண்டியாவில் நேற்று அளித்த பேட்டி:
சபாநாயகர் காதருக்கு மிரட்டல்கள் வந்தது போலவே, எனக்கும் நிறைய மிரட்டல்கள் வந்து உள்ளன. இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மிரட்டல் விடுத்த நபர்களை உடனடியாக கண்டுபிடித்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாருக்கு அறிவுறுத்தி உள்ளேன்.
மங்களூரு சுகேஸ் ஷெட்டி கொலை வழக்கில், பா.ஜ., அரசியல் ஆதாயம் தேடுகிறது. கொலையானவர் ஒரு ரவுடி, அவர் மீது பல வழக்குகள் உள்ளன. இந்த வழக்கை விசாரிக்க போலீஸ் ஏ.டி.ஜி.பி., ஹிதேந்திராவை சம்பவ இடத்திற்கு அனுப்புமாறு உத்தரவிட்டு உள்ளேன்.
பாதுகாப்பு தோல்வி
மனிதனின் உயிர் மிகவும் முக்கியமானது. குற்றவாளிகள் யாராக இருந்தாலும், அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும். பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடந்த இடத்திற்கு பிரதமர் மோடி செல்லவில்லை. சுற்றுலா பயணியர் அதிக எண்ணிக்கையில் கூடும் இடத்தில், ஒரு போலீஸ் அல்லது ராணுவ வீரர் கூட இல்லை. இது பாதுகாப்பு தோல்வி தானே.
ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு 1925 ல் துவங்கப்பட்டது; நுாறு ஆண்டுகளை நெருங்கி விட்டது. இருப்பினும், அவர்கள் தலித்துகளுக்கான இடஒதுக்கீட்டை ஏற்று கொள்ளவில்லை. பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., இரண்டும் சமூக நீதியின் மீது நம்பிக்கை கொள்ளாதவை. எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தார். மல்லிகார்ஜுன கார்கேவும் பிரதமர் மோடிக்கு பல முறை கடிதம் எழுதினார்.
இவ்வளவு போராட்டங்கள், அழுத்தங்களுக்கு பிறகு, மத்திய அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதாக உறுதியளித்து உள்ளது. இருப்பினும், தெளிவாக தேதி எதுவும் குறிப்பிடவில்லை. அதுவும், மக்கள் தொகை கணக்கெடுப்பின் போதே ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என தெரிவித்து உள்ளனர். இந்த கணக்கெடுப்பின் போது, சமூக, கல்வி, பொருளாதாரம் ஆகியவையும் கணக்கிட வேண்டும்.
தனியார்
இடஒதுக்கீடு மீதான 50 சதவீத அதிகபட்ச வரம்பை நீக்கி, அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுக்கிறேன். மேலும், தனியார் துறையிலும் இடஒதுக்கீட்டை கொண்டு வர வேண்டும்.
உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில், இடஒதுக்கீடு 50 சதவீதம் தாண்ட கூடாது. அதற்கு மேல் வழங்க வேண்டும் என்றால் மக்கள் தொகை அடிப்படையில் வழங்கலாம். சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பின்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது மிகவும் அவசியமானது. சமத்துவமான சமுதாயத்தை உருவாக்க இட ஒதுக்கீடு மிக முக்கியமானது. இந்த விஷயத்தில் நீதிபதி ரோகிணி அறிக்கையை பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
ராஜஸ்தானில் சட்டவிரோத குடியேற்றம்; வங்கதேசத்தினர் 6 பேர் கைது
-
அக்னி நட்சத்திரம் நாளை தொடக்கம்: மே 5, 6 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு
-
இந்தியா போர் தொடுத்தால்.., பாகிஸ்தான் ராணுவ கமாண்டோக்கள் சொன்னது என்ன ?
-
என்னை கொலை செய்ய சதி; மீனாட்சி சுந்தரேஸ்வரர்தான் காப்பாற்றினார்: மதுரை ஆதினம் அதிர்ச்சி
-
பாக்.,கில் இருந்து பொருள் இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை!
-
போப் தோற்றத்துடன் அதிபர் டிரம்ப் படம் வெளியீடு; சமூக வலைதளத்தில் வைரல்!