பொன்னேரி தாலுகாவை இரண்டாக பிரிக்க...எதிர்பார்ப்பு!: மக்களின் அலைகழிப்பை தவிர்க்க உருவாக்கப்படுமா?
பொன்னேரி:செங்குன்றம், சோழவரம் ஆகிய குறுவட்டங்களைச் சேர்ந்த மக்கள், நீண்ட துாரம் பயணித்து, பொன்னேரி தாலுகா அலுவலகம் வந்து செல்ல வேண்டிய சூழலில், அவர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஒன்பது குறுவட்டங்களை கொண்ட பெரிய தாலுகாவாக உள்ள பொன்னேரியை இரண்டாக பிரித்து, சோழவரத்தை தலைமையிடமாக கொண்டு, புதிய தாலுகா உருவாக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட ஒன்பது தாலுகாக்கள் உள்ளன. இதில், பொன்னேரி தாலுகா, மாவட்டத்திலேயே அதிக வருவாய் கிராமங்களை கொண்ட மிகப்பெரிய தாலுகாவாக உள்ளது.
இங்கு, பொன்னேரி, மீஞ்சூர், காட்டூர், திருப்பாலைவனம், சோழவரம், ஞாயிறு, ஆரணி, கோளூர், செங்குன்றம் என, ஒன்பது குறுவட்டங்களில், 202 வருவாய் கிராமங்கள் உள்ளன. பொன்னேரி தாலுகா பழவேற்காடு, செங்குன்றம், காட்டுப்பள்ளி என, 25 கி.மீ., சுற்றளவு கொண்டது.
இதில் செங்குன்றம், சோழவரம் குறுவட்டங்களில், 70க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மக்கள் பல்வேறு தேவைகளுக்கு, பொன்னேரி தாலுகா அலுவலம் வந்து செல்ல, 20 - 25 கி.மீ., பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.
குறிப்பாக, முதியோர் உதவித்தொகை விண்ணப்பித்து காத்திருப்பவர்கள், தங்கள் மனுவின் நிலை குறித்து அறிய வந்து செல்லும்போது பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
நீண்ட துாரம் பயணித்து, பட்டா, பட்டா பெயர் மாற்றம் உள்ளிட்டவைகளுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தேடி வரும்போது, அவர்கள் களப்பணிக்கு சென்றிருப்பதை அறிந்து ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
பணிச்சுமையில் அதிகாரிகள்
அதேபோல், மழைக்காலங்களில் செங்குன்றம் பகுதியில் உள்ள புழல் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கும்போது, அங்குள்ள பகுதிகளை கண்காணிப்பது, பாதுகாப்பது, பாதிக்கப்பட்டவர்களை மீட்பது உள்ளிட்ட பணிகளில் தாசில்தார் தலைமையிலான வருவாய்த் துறையினரே ஈடுபடுகின்றனர்.
மாவட்டத்தின் வெள்ளநீர் வடியும் பகுதியாக பொன்னேரி, பழவேற்காடு பகுதிகள் அமைந்துள்ளதால், அதிகாரிகள் அங்கிருந்து கண்காணிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
ஒரே நேரத்தில் இரு வேறு திசைகளில் வெள்ள பாதிப்பு பணிகளை மேற்கொள்ளும் போது, நிர்வாக ரீதியாக அதிகாரிகளும், அலுவலர்களும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
பழவேற்காடு, அண்ணாமலைச்சேரி, காட்டுபள்ளி மற்றும் 40க்கும் அதிகமான மீனவ கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மீனவ கிராமங்கள் இடையே அடிக்கடி ஏரியில் மீன்பிடி தொழில் செய்வது, கடலில் வெளிமாவட்ட விசைப்படகுகள் வரும்போது, அவர்களால் உள்ளூர் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிப்பது என, தொடர்ந்து பிரச்னைகள் இருக்கிறது.
இதுபோன்ற பிரச்னைகளை, பொன்னேரி தாசில்தார் தலைமையில், காவல் துறை மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகள் பேச்சு நடத்தி தீர்வு காண்கின்றனர்.
அதேபோல் மீஞ்சூர், காட்டுப்பள்ளி, அத்திப்பட்டு பகுதிகளில், வடசென்னை அனல்மின் நிலையம், துறைமுகங்கள், எரிவாயு முனையங்கள் என, பல்வேறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. அந்நிறுவனங்களில் தொழிலாளர்கள் பிரச்னை, விபத்து உள்ளிட்டவைகளையும் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு உள்ளது.
மேலும், சாலை, தொழிற்சாலை உள்ளிட்ட புதிய திட்டங்களுக்கான நில எடுப்பு பணிகளை மேற்கொள்வது, தொழில் நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்வது உள்ளிட்ட பணிகளும் வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.
பொன்னேரி தாலுகா, பொன்னேரி, மாதவரம் ஆகிய சட்டசபை தொகுதிகளையும், பொன்னேரி நகராட்சி, மீஞ்சூர் மற்றும் ஆரணி பேரூராட்சி, மீஞ்சூர், சோழவரம், புழல் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களையும் உள்ளடக்கியது.
மாவட்டத்தில், அதிக வருவாய் கிராமங்களை கொண்ட பெரிய தாலுகாவாக பொன்னேரி இருப்பதால், அதிகாரிகள் பணிச்சுமையால் தவிக்கின்றனர். பொதுமக்களின் பிரச்னைகளுக்கும் உரிய நேரத்தில் தீர்வு கிடைப்பதில்லை.
புதிய தாலுகா அவசியம்
பொன்னேரி தாலுகாவில், கடந்த 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்பிடி, 1.10 லட்சம் குடும்பங்களில், 3.89 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். தற்போது, இது இரு மடங்காக அதிகரித்து இருக்கும்.
நிர்வாக வசதிகளுக்காக, பொன்னேரி தாலுகாவை இரண்டாக பிரித்து செயல்படுத்த வேண்டும் என, தொடர்ந்து கோரிக்கை விடப்பட்டு வருகிறது. மூன்று ஆண்டுகளாக தமிழக சட்டசபை கூட்டத்தொடரிலும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
தமிழக அரசு துரித நடவடிக்கையாக இதை செயல்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
பொன்னேரி தாலுகாவில் உள்ள பழவேற்காடு மீனவ பகுதியிலும், மீஞ்சூர் பகுதியில் உள்ள தொழில் நிறுவனங்களிலும் ஏற்படும் பிரச்னைகளை தீர்ப்பதற்கே அதிகாரிகளுக்கு நேரம் சரியாக இருக்கிறது. ஒன்பது குறுவட்டங்களை கண்காணிப்பது என்பது சிரமம்.
புழல், சோழவரம், செங்குன்றம் பகுதிகளில் இருந்து பொன்னேரி சென்று வருவதற்கு சிரமம் ஏற்படுகிறது. குறித்த நேரத்தில் மனுக்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. மேற்கண்ட பகுதிகளுக்கு அரசின் திட்டங்களும் உரிய நேரத்தில் சென்றடைவதில்லை.
காலவிரயம், எரிபொருள் செலவு, வீண் அலைச்சல், அதிகாரிகளின் அலைக்கழிப்பு தொடர்கிறது. சோழவரத்தை தலைமையிடமாக கொண்டு, புதிய தாலுகாவை உருவாக்கினால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தாலுகா குறுவட்டங்கள் வருவாய் கிராமங்கள்ஆவடி 5 31கும்மிடிப்பூண்டி 4 88பள்ளிப்பட்டு 5 70பொன்னேரி 9 202பூந்தமல்லி 4 48ஆர்.கே.பேட்டை 3 37திருத்தணி 6 87திருவள்ளூர் 9 168ஊத்துக்கோட்டை 5 100
மேலும்
-
ராஜஸ்தானில் சட்டவிரோத குடியேற்றம்; வங்கதேசத்தினர் 6 பேர் கைது
-
அக்னி நட்சத்திரம் நாளை தொடக்கம்: மே 5, 6 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு
-
இந்தியா போர் தொடுத்தால்.., பாகிஸ்தான் ராணுவ கமாண்டோக்கள் சொன்னது என்ன ?
-
என்னை கொலை செய்ய சதி; மீனாட்சி சுந்தரேஸ்வரர்தான் காப்பாற்றினார்: மதுரை ஆதினம் அதிர்ச்சி
-
பாக்.,கில் இருந்து பொருள் இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை!
-
போப் தோற்றத்துடன் அதிபர் டிரம்ப் படம் வெளியீடு; சமூக வலைதளத்தில் வைரல்!