காவிலிபாளையம் குளத்தில் படகுகள் சீறிப்பாயும்!

இயற்கையின் ஊற்றெடுப்பில், அத்திக்கடவு திட்டத்தின் அரவணைப்பில் நிரம்பி ததும்பும் காவிலிபாளையம் குளம், நீர் விளையாட்டுக்கு முகவரி கொடுக்க போகிறது.
திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்டங்களின் எல்லை மாவட்டங்களில் ஈரோடும் ஒன்று. பவானிசாகர் ஊராட்சி ஒன்றியம், காவிலிபாளையம் ஊராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில், 480 ஏக்கர் பரப்பில் காவிலிபாளையம் குளம் அமைந்திருக்கிறது. கோவை மற்றும் அவிநாசி வழியாக வரும் நீர்நிலைகளில் வழிந்தோடி வரும் நீர், இக்குளத்தை நிரப்புகிறது. அதோடு, அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டத்தின் கீழும், தற்போது இக்குளத்தில் நீர் செறிவூட்டப்பட்டு வருவதால், குளம் நிரம்பி ததும்புகிறது.
அப்பகுதி மக்கள் இணைந்து 'காவிலிபாளையம் படகு சங்கம்' உருவாக்கினர். இச்சங்கத்தின் தலைவர் டாக்டர் பிரபு, செயலாளர் தினேஷ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள், 'இக்குளத்தில் நீர் விளையாட்டுகளை நடத்தும் அமைப்பான, 'கனோயிங் மற்றும் கயாக்கிங்' சார்பில் படகு விளையாட்டு நடத்த ஊர் மக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தமிழக ஒலிம்பிக் கமிட்டி, 'தமிழ்நாடு கனோயிங் மற்றும் கயாக்கிங்' அமைப்பினர் இதற்கு உதவ வேண்டும்' என்ற கோரிக்கையை, ஈரோடு மாவட்ட படகு மையம் மற்றும் நீர் விளையாட்டு அமைப்பினரிடம் முன்வைத்தனர்.
அதனடிப்படையில் 'கனோயிங் மற்றும் கயாக்கிங்' மாநில அமைப்பின் பொது செயலாளர் மெய்யப்பன் மற்றும் வல்லுனர் குழுவினர், கடந்த, ஜன., மாதம் குளத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக, வரும், 30 மற்றும் அடுத்த மாதம், 1, 2 ஆகிய தேதிகளில் காவிலிபாளையம் குளத்தில் படகு போட்டி நடத்த திட்டமிடப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் துவங்கியுள்ளது.
-----------------------
கண்களுக்கு ரம்மியமாக காட்சியளிக்கும் காவிலிபாளையம் குளம்.
காவிலிபாளையம் படகு சங்க தலைவர் பிரபு கூறியதாவது:கடற்கரையோரம் மட்டுமே நடத்தப்படும் படகு சவாரி, முதன் முறையாக, தமிழகத்தில் உள்ள கிராமப்புறத்தில் உள்ள குளத்தில் நடத்தப்படுகிறது. அமர்ந்து ஓட்டும், முட்டி தள்ளி ஓட்டும் முறை என, இரு வகை போட்டி நடத்தப்படுகிறது. தமிழகத்தின் பல இடங்களில் உள்ள பிரபல படகு போட்டி வீரர்கள் மற்றும் அணியினர் பங்கேற்கும் போட்டி நடத்த திட்டமிட்டுள்ளனர்.அதன் தொடர்ச்சியாக, உள்ளூர் கிராமப்புறங்களில் நீர் விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவ, மாணவியர், இளைஞர் மற்றும் இளம் பெண்களுக்கு உரிய பயிற்சி வழங்கி, அவர்களை நீர் விளையாட்டில் மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க செய்யும் வகையிலான 'பிரிமியர் லீக்' முறையிலான தேர்வு அடிப்படையில், பயிற்சிகள் வழங்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.அவர்களுக்கு தேவையான உடை, உபகரணம், பயிற்சி என அனைத்தும் கிடைப்பதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்படும். நீர் விளையாட்டில் சிறந்து விளங்குவோருக்கு உயர்கல்வி, வேலை வாய்ப்பிலும் முன்னுரிமை கிடைக்கிறது. நீர் விளையாட்டுகளை பல்வேறு தனியார் நிறுவனங்கள் ஊக்குவிப்பதால், வேலை வாய்ப்பும் எளிதாகும். இந்த குளம் ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களின் மையப்பகுதியாக இருப்பதால், அம்மாவட்ட மாணவ, மாணவியர், இளைஞர், இளம் பெண்களும் நீர் விளையாட்டில் சாதிக்க முடியும்.அமைச்சர்கள் ஊக்குவித்தால்...போட்டியை நடத்த 'கனோயிங் மற்றும் கயாக்கிங்' மாநில அமைப்பு திட்டமிட்டுள்ள நிலையில், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, ஈரோடு அமைச்சர் முத்துசாமி, தொகுதி எம்.எல்.ஏ., செங்கோட்டையன் உள்ளிட்ட அனைவரது ஆதரவையும் கோரியுள்ளோம். அவர்களது ஊக்குவிப்பு இருந்தால், தமிழக அளவில், நீர் விளையாட்டு அது சார்ந்த சாதனையாளர்களை கிராமப்புறங்களில் இருந்து அதிகளவில் உருவாக்க முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.---
மேலும்
-
சென்னை வழியாக இலங்கை தப்பினார்களா பஹல்காம் பயங்கரவாதிகள்; உண்மை என்ன?
-
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீறுவது எளிதானதல்ல; தனக்குத்தானே ஆறுதல் சொல்கிறது பாகிஸ்தான்!
-
ம.பி.,யில் புலி தாக்கி பண்ணை தொழிலாளி பலி
-
தடுப்பூசி போட்ட பிறகும் சிறுமிக்கு பரவிய ரேபிஸ் நோய்; கேரளாவில் மற்றொரு சம்பவம்
-
இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்: 17 நாகை மீனவர்கள் காயம்
-
ஆஸி., பொதுத்தேர்தல்; மீண்டும் ஆட்சியைப் பிடித்தது ஆளும் தொழிலாளர் கட்சி