சென்னை வழியாக இலங்கை தப்பினார்களா பஹல்காம் பயங்கரவாதிகள்; உண்மை என்ன?

26

கொழும்பு: சென்னையில் இருந்து சென்ற விமானத்தில் பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் சென்றதாக வெளியான தகவலை தொடர்ந்து, கொழும்பு விமான நிலையத்தில் அந்நாட்டு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.


ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், சுற்றுலாப் பயணிகள் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலின் பின்னணியில், பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.


பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்பரப்பில் நுழைய தடை, பாகிஸ்தானியர்களுக்கு விசா ரத்து, பாக்., பொருட்களை இறக்குமதி செய்ய தடை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.


மேலும், பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளையும் என்.ஐ.ஏ., அதிகாரிகள் அடையாளம் கண்டனர். அவர்களின் போட்டோக்களை வெளியிட்டு, தீவிரமாக தேடி வருகின்றனர்.


இந்த நிலையில், பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த 5 பயங்கரவாதிகள், சென்னையில் இருந்து நண்பகல் 11.59க்கு இலங்கை சென்ற விமானத்தில் தப்பிச் சென்றதாக சென்னை விமானநிலைய அதிகாரிகளுக்கு இமெயில் வந்தது. இதைக் கண்ட அதிகாரிகள் அதிர்ந்து போயினர்.


சென்னையில் இருந்து விமானம் இலங்கைக்கு புறப்பட்டு சென்று விட்டதால், உடனடியாக கொழும்பு விமான நிலைய அதிகாரிகளுக்கு, இது பற்றி தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், சம்பந்தப்பட்ட விமானத்தில் வந்திறங்கிய பயணிகளிடம் கொழும்பு விமான நிலைய அதிகாரிகள் தீவிர சோதனை செய்தனர். ஆனால், சந்தேகிக்கும்படியான நபர்கள் யாரும் இல்லை என்று உறுதியானது. அதன்பிறகு, அந்த இமெயில், புரளி என அதிகாரிகள் உறுதி செய்தனர்.

Advertisement