போராட்டத்திற்கு தள்ள வேண்டாம் முன்னாள் முதல்வர் எச்சரிக்கை

புதுச்சேரி : 'ராஜிவ் காந்தி ஒருங்கிணைந்த பொலிவுறு பேருந்து முனையம்' என பெயர் பலகை வைக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கை:

காங்., ஆட்சியில் பஸ் நிலையம் புதுப்பிக்க பொலிவுறு திட்டம் கொண்டுவரப்பட்டு, ரூ. 1,500 கோடியில் 64 திட்ட பணிக்கு, மத்திய நகர்ப்புற மேம்பாட்டு துறை ஒப்புதல் அளித்தது.

பஸ் நிலையம் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டபோது, ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அந்தத் திட்டத்தில் 64 திட்டங்களை 32 திட்டங்களாக குறைத்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மொத்த தொகையான 1,500 கோடியில் இருந்து 640 கோடியாக குறைத்தது என்.ஆர்.காங்., - பா.ஜ., அரசு. இதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது.

சமீபத்தில் பொதுப்பணித்துறை பொறியாளர் சி.பி.ஐ., அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். பஸ் நிலையம் கட்டுவதில் எவ்வளவு தொகை செலவானது என்பதை கட்டட வல்லுனர்கள் மூலம் கேட்டு சி.பி.ஐ., அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பஸ் நிலையம் திறப்பு விழாவிற்கு, புதுச்சேரி அரசு கொடுத்த விளம்பரத்தில் முன்னாள் பிரதமர் ராஜிவ் படமோ அல்லது ராஜிவ் காந்தி ஒருங்கிணைந்த பொலிவுறு பேருந்து முனையம் என்று குறிப்பிடாமல் ஒருங்கிணைந்த பொலிவுறு பேருந்து முனையம் என்று குறிப்பிடப்பட்டு, ராஜிவ் பெயர் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.

ராஜிவ் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் முதல்வர் செயல்படுவது வேதனை அளிக்கிறது. 'ராஜிவ் காந்தி ஒருங்கிணைந்த பொலிவுறு பேருந்து முனையம்' என பெயர் பலகை வைக்க வேண்டும். இல்லையெனில், காங்., சார்பில் போராட்டம் நடத்தும் சூழலை அரசு உருவாக்க கூடாது.

Advertisement