திருமண செலவை குறைத்து சாலை அமைத்து கொடுத்த தம்பதி; கிராம மக்கள் பாராட்டு

7


நாக்பூர்: தனது திருமண செலவை குறைத்ததன் மூலம் மிஞ்சிய பணத்தை கொண்டு சாலை அமைத்து கொடுத்த இளம் விவசாயிக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இன்றைய காலத்தில் திருமணம் என்பது ஆடம்பர நிகழ்வாக மாறிவிட்டது. ஆடல், பாடல், போட்டோஷூட் என பல லட்சம் செலவாகிறது. ஆனால், மஹாராஷ்டிராவில், இதனை மாற்றி இளைஞர் ஒருவர், செலவை குறைத்து, அதில் மிஞ்சிய பணத்தை கொண்டு தனது கிராமத்தில் சாலை அமைத்து கொடுத்து உள்ளார்.


இது பற்றிய தகவல் பின்வருமாறு: மஹாராஷ்டிராவின் சந்திராபூர் மாவட்டத்தின் சுசா சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் எகுடே(29). விவசாயத்தில் பட்டமேற்படிப்பு முடித்துள்ளார்.
இக்கிராமத்தில் சாலை வசதி இல்லாததால், விவசாயிகள் தங்களது விளைபொருட்களை எடுத்து செல்வதில் கடும் சிரமப்பட்டனர். மழை காலங்களில் மாட்டு வண்டிகளில் கூட பொருட்களை எடுத்துச் செல்ல முடியாத நிலை இருந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீகாந்த் , சில விவசாயிகளுடன் சேர்ந்து தனது நிலம் வழியாக மண் சாலை அமைத்து கொடுத்தார். இதற்காக 13 ஆயிரம் செலவானது. இருப்பினும் அந்த சாலை போதுமானதாக இல்லை. கிராம பஞ்சாயத்தில் சென்று முறையிட்டும் எந்த பயனும் கிடைக்கவில்லை
இதனையடுத்து சொந்தமாக சாலையை சீரமைக்க முடிவு செய்தார். அப்போது அவருக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கவே, அதற்கான செலவை குறைத்து அதில் கிடைக்கும் பணம் மூலம் சாலையை சீரமைக்க முடிவு செய்தார். அதற்கு ஏற்றவாறு மணமகளை தேடி வந்தார். அந்த வகையில் யத்மால் மாவட்டத்தை சேர்ந்த அஞ்சலி என்பவருடன் அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஸ்ரீகாந்தின் யோசனையை மணமகள் வீட்டாரும் பாராட்டினர்.
திருமண செலவை குறைப்பதன் மூலம் மிச்சமாகும் பணத்தை கொண்டு, ஜேசிபி இயந்திரத்தை வாடகைக்கு எடுத்து அனைத்து பருவநிலையை தாங்கும் வகையில் சாலையை சீரமைக்க ஸ்ரீகாந்த்தும், அஞ்சலியும் முடிவு செய்தனர்.


இதன்படி செலவை குறைப்பதற்காக திருமண மண்டபம் ஏற்பாடு செய்யாமல் திறந்தவெளி மைதானத்தில் கடந்த மாதம் 28 ம் தேதி எளிய முறையில் திருமணம் செய்து கொண்டனர்.
இதன் மூலம் மிஞ்சிய ரூ.50 ஆயிரம் பணம் மூலம் சாலையை தம்பதியினர் சீரமைத்து கொடுத்தனர். இதற்காக அவரை கிராம மக்கள் பாராட்டி வருகின்றனர்.


மேலும், திருமணத்தன்று, பணம் அல்லது பரிசு பொருட்களை யாரும் தர வேண்டாம் எனக்கூறிய இத்தம்பதி, அதற்கு பதில் புத்தகம் அல்லது மரக்கன்றை அளிக்கும்படி கோரிக்கை விடுத்தனர். இதன் மூலம் 90 வகையான மரக்கன்றுகள் திருமண பரிசாக கிடைத்தன. இவை ஸ்ரீகாந்தின் பண்ணை நிலத்தில் நடவு செய்யப்பட்டு உள்ளது.
ஸ்ரீகாந்துக்கு சமூக சீர்திருத்தத்தில் ஆர்வம் அதிகம். இதற்காக அரசு பணிக்கு கூட முயற்சி செய்யாமல் விவசாயம் செய்து பலருக்கு உதவி வருகிறார். பிஷி என்ற கிராமத்தில் உள்ள பழங்குடியின மாணவர்கள் போட்டி தேர்வுக்கு தயார் ஆவதற்கு உதவி செய்வதற்காக தனது சொந்த செலவில் திட்டம் ஒன்றை செயல்படுத்தி வருகிறார். இங்கு இலவசமாக பயிற்சியும், தங்குமிடமும் அளிக்கப்படுகிறது. இதன் மூலம் நூலக வசதியும், கல்வி உதவியும் கிடைப்பதாக கிராம மக்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

Advertisement