மதுரை ஆதினம் கார் மீது உளுந்துார்பேட்டையில் மோதிய கார்; கொல்ல சதி எனப் புகார்

2

மதுரை : மதுரையில் இருந்து சைவ சித்தாந்த மாநாட்டில் பங்கேற்க சென்ற மதுரை ஆதினத்தின் கார் மீது மற்றொரு கார் உளுந்துார்பேட்டையில் மோதியது. அவரை கொல்ல சதியாக இருக்கலாம் என போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

தருமபுரம் ஆதினம் ஏற்பாட்டில் சென்னை அருகே காட்டாங்குளத்துாரில் 6வது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு நடந்து வருகிறது. மே 5 வரை நடக்கும் இம்மாநாட்டில் பங்கேற்க நேற்று காலை மதுரை ஆதினம் காரில் புறப்பட்டு சென்றார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்துார்பேட்டையில் அஜீஸ் நகர் சர்வீஸ் சாலை வழியாக ரவுண்டானாவை கார் கடந்து செல்ல முயன்றபோது பின்னால் வந்த கார் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் துாங்கிக்கொண்டிருந்த ஆதினம் எவ்வித காயமும் இன்றி உயிர்தப்பினார். தன்னை கொல்ல நடந்த சதியாக இருக்கலாம் என ஆதினம் சந்தேகம் தெரிவித்தார்.

நமது நிருபரிடம் அவர் கூறியதாவது:

மோதிய காரில் பதிவெண் இல்லை. குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த இருவர் தங்கள் மத அடையாளங்களுடன் இருந்தனர். தொடர்ந்து சமூக பிரச்னைகள் குறித்து கருத்து தெரிவித்து வருவதால் என்னை கொல்ல திட்டமிட்டு என்னை பின் தொடர்ந்து அவர்கள் வந்திருக்கலாம். இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது என்றார்.

சில மாதங்களுக்கு முன் திருச்சி அருகே சென்றபோது தனது பயணம் குறித்து கார் டிரைவர் மர்மநபர்களிடம் தொடர்ந்து பேசி வந்ததாகவும், அதனால் உயிருக்கு ஆபத்து எனக்கருதி அவரை வேலையில் இருந்து நீக்கியதாகவும் மதுரை ஆதினம் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement