தள்ளுவண்டியில் பயறு வியாபாரம் செய்யும் பெண்ணிடம் லஞ்சம் கேட்ட பெண் வி.ஏ.ஓ.,

மதுரை: மதுரையில் வாரிசு சான்றிதழ் வழங்க, தள்ளுவண்டியில் பயறு வியாபாரம் செய்யும் பெண்ணிடம் ரூ.18 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., இந்திரா 46, கைது செய்யப்பட்டார்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியைச் சேர்ந்தவர் முருகேஸ்வரி. இவரது கணவர் கணேசன். இரு மகன்கள் உள்ளனர். 2019ல் கணவர் இறந்ததை தொடர்ந்து அவரது சொந்த ஊரான மதுரை விராதனுாரில் உள்ள சொத்துக்களை விற்க முருகேஸ்வரி முடிவு செய்து வாரிசு சான்றிதழுக்கு ஏப்.,1ல் ஆன்லைனில் விண்ணப்பித்தார். லஞ்சம் பெறும் நோக்கில் எவ்வித காரணமும் இன்றி அதை விராதனுார் வி.ஏ.ஓ., இந்திரா நிராகரித்தார்.

நேரில் விசாரிக்க சென்ற முருகேஸ்வரியிடம் மீண்டும் விண்ணப்பிக்குமாறு வி.ஏ.ஓ., கூறினார். ஏப்.,23ல் முருகேஸ்வரி விண்ணப்பித்துவிட்டு மே 1ல் நேரில் சென்றபோது ரூ.18 ஆயிரம் 'செலவாகும்' என வி.ஏ.ஓ., இந்திரா கூறினார்.

இதுகுறித்து நேற்று காலை லஞ்சஒழிப்பு ஏ.டி.எஸ்.பி., சத்தியசீலனிடம் முருகேஸ்வரி புகார் செய்தார். மதியம் அண்ணாநகர் - வண்டியூர் ரோடு சந்திப்பு அருகே முருகேஸ்வரியை வரவழைத்து ரோட்டில் ரூ.18 ஆயிரம் லஞ்சம் வாங்கிய இந்திராவை இன்ஸ்பெக்டர் குமரகுரு தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

Advertisement