உத்தரகோசமங்கையில் 14 பவுன் நகையை மீட்டுத் தந்த இளைஞர் போலீசார் பாராட்டு

உத்தரகோசமங்கை : உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் மண்டல பூஜையை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்வதற்காக தென்காசியை சேர்ந்த நம்பீஸ்வரி 40, தனது குடும்பத்தினருடன் வந்திருந்தார்.

இந்நிலையில் கோயிலின் நுழைவாயில் பகுதியில் காலணிகள் போடும் இடத்தில் கருப்பு நிறத்தில் ஹேண்ட் பேக் ஒன்று இருந்துள்ளது. திருப்புல்லாணி அருகே பள்ளமோர்குளத்தைச் சேர்ந்த அப்பகுதி அ.தி.மு.க., கிளைச் செயலாளர் வெங்கடேஷ் 30, சுவாமி தரிசனம் முடித்துவிட்டு தனது காலணியை எடுப்பதற்காக வந்தார்.

அப்போது கருப்பு ஹேண்ட் பேக் இருந்துள்ளது. அதை எடுத்தவர் அப்படியே உத்தரகோசமங்கை புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பைக்குள் 14 பவுன் தங்க நகைகள், ரூ. 52 ஆயிரம் பணம், ஏ.டி.எம்., கார்டு, ஒரு அலைபேசி ஆகியவற்றை காணாமல் தவித்து வந்த குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து போலீசார் வரச் செய்தனர்.

கீழே கிடந்த பணம் மற்றும் நகையை பத்திரமாக உத்தரகோசமங்கை போலீசார் முன்னிலையில் வெங்கடேஷ் தென்காசியை சேர்ந்த பெண் பக்தரிடம் ஒப்படைத்தார். எல்லாம் சரியாக இருப்பதைக் கண்டு நன்றி தெரிவித்து கிளம்பினார். இளைஞரின் நேர்மையான இந்த செயலை உத்தரகோசமங்கை போலீசார் பாராட்டி கவுரவித்தனர்.

Advertisement