தகவல் தொழில்நுட்பத்தில் பின்தங்கிய தமிழக காவல் துறை: ஐகோர்ட் அதிருப்தி

சென்னை: தகவல் தொழில்நுட்பத்தில், தமிழக காவல் துறை பின்தங்கி இருப்பதாக, சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
சுற்றுலா அழைத்துச் செல்வதாக கூறி, 13.66 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, சென்னையைச் சேர்ந்த ஜெயசிங் வசந்த் ரஞ்சித் என்பவருக்கு எதிராக, வேலுாரை சேர்ந்த மனோகர் தாஸ் என்பவர், 2020ல் சென்னை, கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால், 2022ல் மனோகர் தாஸ், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரணையின் போது, இரண்டு மாதங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று, காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கை முடித்து வைத்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
நீதிமன்றத்தில் உறுதியளித்தபடி நடவடிக்கை எடுக்கவில்லை என, மனோகர் தாஸ் சார்பில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா பிறப்பித்துள்ள உத்தரவு:
நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றும் வகையில், உரிய விதிகளை காவல்துறை வகுக்க வேண்டும். மேலும், நீதிமன்ற உத்தரவுகள் அமல்படுத்தப்படுவதை, 'ஆன்லைன்' முறையில் கண்காணிப்பதாக கூறினாலும், கள நிலவரம் வேறாக இருக்கிறது.
பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொரு கட்டத்திலும், நீதிமன்ற கதவை தட்ட வேண்டி உள்ளது. தகவல் தொழில்நுட்பத்தில், தமிழக காவல் துறை பின்தங்கி உள்ளது. விசாரணை அமைப்புகளை முழுமையாக, 'டிஜிட்டல்' மயமாக்குவதற்கான காலம் வந்து விட்டது.
நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றாத அதிகாரிகள் மீது சட்டப்படியும், துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும். நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றுவதற்கான நிலையான வழிகாட்டுதல்களை பிறப்பித்து, அவற்றை பின்பற்றுவதை, டி.ஜி.பி.,யும் உள்துறையும் உறுதி செய்ய வேண்டும்.
நீதிமன்ற உத்தரவுகள் பின்பற்றப்படுகின்றனவா என்பது குறித்து, போலீஸ் கமிஷனர்கள், எஸ்.பி.,க்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.










மேலும்
-
பழிதீர்க்குமா சென்னை? பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் பந்துவீச்சு தேர்வு
-
ஜாதிவாரி கணக்கெடுப்பிற்கான காரணம் தெரியவில்லை: சொல்கிறார் கார்கே
-
பிரதமர் மோடியுடன் காஷ்மீர் முதல்வர் உமர் சந்திப்பு!
-
கீவ் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கிடையாது: ரஷ்யா எச்சரிக்கை
-
திருமண செலவை குறைத்து சாலை அமைத்து கொடுத்த தம்பதி; கிராம மக்கள் பாராட்டு
-
சென்னை வழியாக இலங்கை தப்பினார்களா பஹல்காம் பயங்கரவாதிகள்; உண்மை என்ன?