பணியாளர் பற்றாக்குறையால் வேளாண் விற்பனை மையங்கள் மூடல்; புதிய கட்டடம் திறக்காததால் இடு பொருட்கள் வாங்க சிரமம்

தேவதானப்பட்டி: வேளாண் துறையில் பணியாளர் பற்றாக்குறையால் படிப்படியாக வேளாண் விற்பனை மையங்கள் மூடப்படுவதால் இடுபொருட்கள் வாங்க 35 கி.மீ.துாரம் கடந்து வருவதால் விவசாயிகள் சிரமம் அடைகின்றனர். தேவதானப்பட்டியில் விற்பனை மையம் கட்டி முடித்து பத்து மாதங்கள் ஆகியும் திறக்காததால் அலைக்கழிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.

பெரியகுளம் தாலுகா விவசாயிகளுக்கு தேவையான உரம், பூச்சி மருந்து, விதைகள் உள்ளிட்ட இடுபொருட்கள் வாங்க பெரியகுளம், வடுகபட்டி, லட்சுமிபுரம், தேவதானப்பட்டி ஆகிய 4 ஊர்களில் வேளாண் விற்பனை நிலையங்கள் செயல்பட்டது. சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள் அந்தந்த பகுதிகளில் உள்ள வேளாண் விற்பனை மையங்களில் இடு பொருட்கள் வாங்கி பயன்பெற்றனர்.

மூடிய விற்பனை மையங்கள்



பெரியகுளம் வேளாண் விற்பனை நிலையம் வடகரை நகராட்சி வணிகவளாக கட்டடத்தில் செயல்பட்டு வந்தது. இதில் பெரியகுளம் பகுதி விவசாயிகள் இடுபொருட்கள் வாங்கி செல்ல வசதியாக இருந்தது.

இந்நிலையில் வேளாண் விற்பனை மையத்தில் நிலவிய பணியாளர்கள் பற்றாக்குறையால் ஒரு ஆண்டுக்கு முன் இந்த விற்பனை மையம் மூடி வடுகபட்டி ஒன்றிய அலுவலகத்தில் செயல்படும் விற்பனை நிலையத்துடன் இணைக்கப்பட்டது.

இதே போல் லட்சுமிபுரத்தில் செயல்பட்ட விற்பனை மையமும் 4 மாதங்களுக்கு முன் மூடப்பட்டது.

இதனால் பெரியகுளம் மற்றும் லட்சுமிபுரம் விவசாயிகள் 10 கி.மீ., சுற்றி வடுகபட்டிக்கு வந்து செல்லும் நிலை உள்ளது.

34 கி.மீ., அலையும் விவசாயிகள்



மாவட்டத்தின் கடைகோடியில் உள்ள ஜி.கல்லுப்பட்டி,கெங்குவார்பட்டி விவசாயிகள் தேவதானப்பட்டி விற்பனை மையத்தில் பயன்பெறும் வகையில் தேவதானப்பட்டியில் இடு பொருட்கள் விற்பனை மையம் 10 மாதங்களுக்கு முன் கட்டுமானப்பணி முடிந்தது.

ஆனால் இன்னும் திறக்கப்பட வில்லை. இதனால் கெங்குவார்பட்டி, ஜி.கல்லுப்பட்டி பகுதி விவசாயிகள் வடுகபட்டியில் உள்ள இடு பொருட்கள் மையத்திற்கு வர கோடை வெயிலில் 34 கி.மீ., துாரம் சென்று வருகின்றனர். தேவதானப்பட்டி, அட்டனம்பட்டி, காமக்காபட்டி, மஞ்சளாக பகுதி விவசாயிகள் 20 கி.மீ., சென்று வடுகபட்டிக்கு வருகின்றனர். விரைவில் தேவதானப்பட்டி மையம் திறக்க வேண்டும்.

நகராட்சி தலைவர் சுமிதா கூறுகையில், 'பெரியகுளம் வேளாண் விற்பனை நிலையத்திற்கு, புது பஸ் ஸ்டாண்ட் 7ம் பகுதி நகராட்சி பள்ளி முன்புறம் நகராட்சிக்கு சொந்தமான பழைய நூலக வளாகம் தற்போது காலியாக உள்ளது. வேளாண் விற்பனை நிலையத்திற்கு குறைந்த வாடகைக்கு தர தயாராக உள்ளோம். விவசாயத்துறை அணுகிடலாம்,' என்றார்.-

Advertisement