நிதி நிறுவன மோசடி வழக்கை விசாரித்த பெண் டி.எஸ்.பி., அரசியல் தலையீட்டால் இடமாற்றம்; கோர்ட் உத்தரவிட்டும் மாற்றிய மர்மம்!

மதுரை: மதுரை மதுரையில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் முதலீடு பெற்று ரூ.223 கோடிக்கு மேல் மோசடி செய்த மதுரை நியோமேக்ஸ் நிதிநிறுவனம் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட டி.எஸ்.பி., மணீஷா, அரசியல் தலையீட்டால் இடமாற்றப்பட்டுள்ளார். இவரை மாற்றக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ள நிலையில், இடமாற்றப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
13 ஆயிரம் பேர் புகார்
மொத்தம் 13 ஆயிரம் பேரிடம் புகார்கள் பெறப்பட்டன. இதற்காக சிறப்பு முகாம்கூட நடத்தப்பட்டது. மொத்தம் 125 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு இயக்குநர்கள் வீரசக்தி, கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன் உட்பட 50 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ.223 கோடிக்கும் மேல் மோசடி செய்தது தெரிந்தது. அதன்மூலம் வாங்கப்பட்ட ரூ.80 கோடி மதிப்புள்ள அசையும், அசையா சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவ்வழக்கின் விசாரணையின்போது டி.எஸ்.பி., மணீஷாவின் பணியை பாராட்டிய உயர்நீதிமன்றம் மதுரை கிளை, அவரை இடமாற்றம் செய்யக்கூடாது என உத்தரவிட்டது.
அரசியல் தலையீடு
இதன்பிறகு டி.எஸ்.பி.,க்கு பல்வேறு தரப்பில் இருந்தும் அழுத்தம் வந்தது. அக்டோபரில் மணீஷா இடமாற்றப்பட்டு, திண்டுக்கல் டி.எஸ்.பி., இமானுவேல் ராஜ்குமார் நியமிக்கப்பட்டார். ஓரிரு நாளில் மீண்டும் மணீஷாவே விசாரணை அதிகாரியாக நீடித்தார். இந்நிலையில் மோசடி செய்தவர்களின் உண்மையான சொத்துக்களை கண்டறிந்து அதை பறிமுதல் செய்வதற்கான வேலைகளை சில நாட்களுக்கு முன் மணீஷா துவக்கினார்.
அன்றுமுதல் அவருக்கு மீண்டும் அழுத்தம் கொடுக்க ஆரம்பிக்கப்பட்டது. அதை கருத்திற்கொள்ளாமல் 20 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டிருந்த நிலையில், அரசியல் தலையீட்டால் மீண்டும் இடமாற்றப்பட்டு, டி.எஸ்.பி., இமானுவேல் ராஜ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது: இளம்பெண் டி.எஸ்.பி.,யான மணீஷா, நேர்மையாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்ததன் பலனாக எங்களுக்கு முதலீடு திரும்ப கிடைக்கும் என எதிர்பார்த்தோம். மோசடி செய்தவர்களின் சொத்துக்களை அளவிடும் குழுவில் டி.எஸ்.பி., இடம்பெற்றிருந்த நிலையில் அவர் இடமாற்றப்பட்டது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. உண்மையான சொத்துக்களை நீதிமன்றத்தில் அவர்கள் தெரிவிக்கவில்லை. அதை டி.எஸ்.பி., கண்டுபிடித்து பறிமுதல் செய்ய அரசுக்கு பரிந்துரைத்து 4 மாதங்களாகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
உயர்நீதிமன்றம் உத்தரவை மீறி அவரை இடமாற்றியது நீதிமன்ற அவமதிப்பாகும். இதுதொடர்பாக யாரும் வழக்கு தொடரக்கூடாது என்பதற்காக நீதிமன்றத்தின் கோடை விடுமுறையை கணக்கிட்டு ஏப்.,30ல் மீண்டும் இடமாற்றப்பட்டுள்ளார். இதை நீதிமன்றம் தானாக முன்வந்து இதுகுறித்து விசாரிக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.



மேலும்
-
ரபாடா விலகியது ஏன்: ஊக்கமருந்து பயன்படுத்தியதால் 'சஸ்பெண்ட்'
-
துப்பாக்கி சுடுதல்: கிரண் ஜாதவ் 'தங்கம்'
-
ஹாக்கி: இந்தியா 4வது தோல்வி
-
பாலம் கட்டுமானப் பணியின் போது கிரேன் சரிந்து விபத்து; 3 தொழிலாளர்கள் பலி
-
மலையாள மண்ணில் லஞ்சம், ஊழலை வேரறுக்கும் 'மதுரையின் மருமகன்'
-
மாற்றுத்திறனாளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கேரள கோர்ட் தீர்ப்பு