ரபாடா விலகியது ஏன்: ஊக்கமருந்து பயன்படுத்தியதால் 'சஸ்பெண்ட்'

ஜோகனஸ்பர்க்: ஊக்கமருந்து பயன்படுத்தியதால் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட தென் ஆப்ரிக்காவின் ரபாடா, பிரிமியர் லீக் தொடரில் இருந்து விலகினார்.

தென் ஆப்ரிக்க வேகப்பந்துவீச்சாளர் ரபாடா 29. இம்முறை பிரிமியர் லீக் தொடரில் குஜராத் அணிக்காக 2 போட்டியில் மட்டும் விளையாடினார். பின், சொந்த காரணங்களுக்காக பாதியில் நாடு திரும்பினார். தற்போது ரபாடா விலகியதற்கான காரணம் தெரியவந்துள்ளது. இவர், தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியதால் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார். இதனால் பிரிமியர் லீக் தொடரில் இருந்து பாதியில் விலக நேரிட்டது.

கடந்த ஜனவரி-பிப்ரவரி மாதம் தென் ஆப்ரிக்காவில் நடந்த 'எஸ்.ஏ.20' தொடரில் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணிக்காக ரபாடா விளையாடினார். இத்தொடரின் போது இவர், ஊக்கமருந்தை பயன்படுத்தி இருக்கலாம். இருப்பினும் இவருக்கு எப்போது சோதனை நடத்தப்பட்டது, எவ்வளவு காலம் தடை என்பது தெரியவில்லை. இதனால் வரும் ஜூன் 11-15ல் லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் (ஆஸி-தெ.ஆப்.,) ரபாடா விளையாடுவது சந்தேகம்.
இதுகுறித்து ரபாடா கூறுகையில், ''தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்தியதால் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டேன். இதனால் பிரிமியர் லீக் தொடரில் இருந்து விலகினேன். இதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். மீண்டும் போட்டியில் விளையாட ஆவலுடன் காத்திருக்கிறேன்,'' என்றார்.

Advertisement