'வேத ஆகமங்களின் அடிப்படையிலானதே இந்திய பண்பாடு'

6

திருக்கயிலாயப் பரம்பரை தருமை ஆதீனம் அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் எஸ்.ஆர்.எம்., பல்கலையின் தமிழ்ப்பேராயம் சார்பில் மூன்று நாள் நடக்கும் ஆறாவது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு துவங்கியது.

தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா, தமிழக கவர்னர் ரவி, எஸ்.ஆர்.எம்., பல்கலை வேந்தர் பாரிவேந்தர், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பேசினர்.

இந்த, ஆறாவது சர்வதேச சைவ சிந்தாந்த மாநாட்டில், 14 நாடுகளில் இருந்து, ஆன்மிக தலைவர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் என, 3,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். மாநாடு துவக்க நிகழ்வாக சிறப்பு மலரை, பா.ஜ., தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா வெளியிட்டார்; கவர்னர் ரவி பெற்றுக்கொண்டார்.

நாகரிக சிந்தனை



பின், நட்டா பேசியதாவது;

சைவ சித்தாந்தம் என்பது, வெறும் ஒரு மதத்தத்துவமாக மட்டுமல்ல; அது ஒரு பெரும் நாகரிக பாரம்பரியம். தமிழகத்தில் ஆழமாக வேரூன்றிய இந்த மரபு, தமிழ் அடையாளத்தின் ஆதாரமாக விளங்குகிறது.

சைவ சித்தாந்தத்தின் ஞானத்தை பரப்பிய முனிவர்கள் மற்றும் நாயன்மார்களின் சொந்த மண்ணாக தமிழகம் உள்ளது. இங்குள்ள கோவில்கள், கலைகள், இலக்கியச் செல்வங்கள் ஆகியவற்றின் வழியாக, சைவ தத்துவம் பரிணாமம் அடைந்துள்ளது.

தருமபுரம் ஆதீனம், சைவ சித்தாந்தத்தின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பணியாற்றி வருகிறது. சைவ சித்தாந்தம் வெறும் மதத்திற்கான தத்துவம் மட்டும் அல்ல; அது ஒரு நாகரிக சிந்தனை கட்டமைப்பாகும்.

இது ஆன்மா, கடவுள், உலகம், மூன்றுக்கும் இடையிலான புனித உறவை உணர்த்துகிறது. திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் போன்ற நாயன்மார்கள் இயற்றிய புனித பாடல்கள், தெய்வீக ஆற்றலை கொண்டுள்ளன. மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகம் மனித மனதைக் கடக்கும் வல்லமையை உடையது.

சைவ சித்தாந்தத்தை புரிந்து கொள்வது என்பது, கயிலாய பர்வதத்தை புரிந்து கொள்வதற்கு ஈடாகும். இன்றைய உலகில் பொருளாதார ஆசைகள் மேலோங்கி உள்ளன. ஆனால், சைவ சித்தாந்தம் நம்மிடம் உள்ள தெய்வீகத்தை உணரச் செய்கிறது. இந்த மாநாடு, ஆன்மிகம் மற்றும் தொழில்நுட்பம் இரண்டும் ஒன்றிணையும் தருணமாக அமைந்துஉள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

சிந்தனைகளின் பாசறை



கவர்னர் ரவி பேசியதாவது;

சைவ சித்தாந்தம் என்பது, வெறும் மதக் கோட்பாடு அல்ல. அது நம் நாகரிகத்தின் அடித்தளமாகவும் நம் கலாசாரத்தின் சாரமாகவும் இருக்கிறது. புனிதமான பாரதம், காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை, ஆன்மிக சிந்தனைகளின் பாசறையாக விளங்கியுள்ளது.

தமிழ் மண்ணில் நாயன்மார்கள், சித்தர்கள், ஞானிகள் போன்றவர்கள், சைவ சித்தாந்தத்தை பொதுமக்களுக்கு எடுத்துச் செல்ல மிகுந்த பங்களிப்பாற்றி உள்ளனர். அப்போதைய கல்வி நிறுவனங்கள் மற்றும் பண்டிதர்கள் மத்தியில் மட்டும் காணப்பட்ட இந்த சித்தாந்தத்தை, நம்முடைய மகான்கள் தமிழில் இயற்றிய பக்திப் பாடல்கள், எளிய மக்களும் புரிந்துகொள்ள உதவின. அவர்கள் சைவ சித்தாந்தத்தின் சாரத்தை எளிமையாக எடுத்துரைத்தனர்

தேவாரம், திருவாசகம் போன்றவை வாயிலாக, மக்கள் உள்ளத்தில் தெய்வீக உணர்வை ஊட்டி, ஆன்மிக இலக்கியத்தையும் உருவாக்கினர். இந்த ஆன்மிக வரலாறு, வெறும் கோவில்கள், கல்வி நிறுவனங்களில் மட்டுமின்றி, மக்களின் மனங்களில் நீடித்து நின்றதால்தான், ஆயிரம் ஆண்டுகளாக நாட்டை ஆதிக்கம் செலுத்தியவர்களால் கூட, அதை அழிக்க முடியவில்லை. காரணம், அது உள்ளத்தில் ஆன்மிக ஒளியாக இருக்கிறது.

இலக்கியத்தின் உச்சம்



சைவ சித்தாந்தத்தை தமிழ் மொழியில் பரப்பினர். பிரதமர் மோடியின் பார்வையும், சைவ சித்தாந்த அடிப்படை எண்ணங்களோடு ஒத்துப்போகின்றன. சைவ சித்தாந்தங்களில் வேற்றுமை என்பதே கிடையாது. வாழும் சக்தியாக விளங்குகிறது சைவ சித்தாந்தம்.

தனியார் கல்லுாரி மற்றும் பல்கலையில், தத்துவயியல் துறைகளில் சைவ சித்தாந்தத் துறை அமைக்க வேண்டும். திருமுறை, சைவ சித்தாந்தங்களை பாடத்திட்டங்களில் இணைக்க வேண்டும். இது ஆன்மிகப் பாடமாக மட்டுமின்றி, இலக்கியத் திறன்கள் நிறைந்த ஒரு கலையாக இருக்கும்.

வேத ஆகமங்களின் அடிப்படையில்தான் இந்திய பண்பாடு அமைந்துள்ளது. தேவாரம், திருவாசகம் பாடக்கூடிய பயிற்சிகள், தமிழகத்தில் சில காரணங்களால் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டன. பன்னிரு திருமுறை என்பது, தமிழ் இலக்கியத்தின் உச்சம்.

சைவ சமயத்தைச் சேர்ந்த ஆச்சாரியர்கள், தமிழ் மட்டுமின்றி பல்வேறு மொழிகளிலும் பேசக்கூடிய திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.


இவ்வாறு அவர்கள் கூறினர்.


'

சைவமே உண்மை சமயம்; முற்போக்கு சிந்தனை உடையது'



''சைவ சமயத்தில் பிறந்த நாம், மதம் மாறி போய் விடக்கூடாது. நம் மனதை மாற்றும் செயல்களை செய்வர்; அதில், நாம் கவனமாக இருப்பது அவசியம்,'' என, மதுரை ஆதீனம் தெரிவித்தார்.

சைவ சித்தாந்த மாநாட்டில், மதுரை ஆதீனம், 293வது குருமகா சந்நிதானம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பேசியதாவது:

பாரத நாட்டில் பிறப்பது புண்ணியம்; அதிலும், தமிழ்நாட்டிலே பிறப்பது, அதை விட புண்ணியம். தற்போது, இளைஞர்களை சிவஞான போதத்தை துாக்க வைத்த பெருமை, தருமையாதீனத்தை சேரும்.

தருமை ஆதீனம் பேசுகையில், நிலம் கொடுத்தது குறித்து கூறினார். நிலம் உள்ளது; ஆனால், குத்தகை தருவதில்லை. குத்தகை என்றாலே, குத்த வருகின்றனர்.ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன;ஆனால், குத்தகை மட்டும் வருவதில்லை.

பா.ஜ.,வினர் தேசபக்தி மிக்கவர்கள். எத் தனையோ பிரதமர், நம் நாட்டை ஆண்டுள்ளனர். ஆனால், ஒரே ஒரு பிரதமர் மட்டும் தான் ஆண்மை மிக்கவராக உள்ளார். தற்போது, உலகமே பிரதமர் மோடியை பாராட்டி வருகிறது. நமது கவர்னர் ரவி துணிச்சலாகச் செயல்பட்டு வருகிறார். 'கிரேட் மேன் தி கவர்னர்' என்று கூறத் தகுதியானவர்.

சைவ சித்தாந்த சாஸ்திர நுால்கள், இறைவன் சிவபெருமானை எளிதில் அடைவதற்கான நெறிகளை காட்டுவதாகும். சிவனோடு தொடர்புடைய நுால்களை, புகழ் நுால்கள் என்பர். அவை பன்னிரு திருமுறைகளாக தொகுக்கப்பட்டுள்ளன.

திருமுறைகளால் பெற முடியாதது, வேறு ஒரு முறையாளும் பெற முடியாது. இது, இறைவனது ஆணை. சைவ சமயமே உண்மை சிவம், உண்மை சமயம். இது முற்போக்கு சிந்தனை உடையது. வெறும் நம்பிக்கை மேலில்லாது, அறிவியல் சார்ந்து கருத்துக்களை புலப்படுத்தி இருப்பது.

பிற எல்லா சமயங்களையும், கொள்கைகளையும் தன்பால் ஈர்த்து, சமயம் கடந்த சமரச ஒருமைப்பாட்டை கொண்டு மகிழும் நோக்கம் கொண்டது. சைவ சமயம் என்பது வெறும் கோட்பாடு அன்று; அது வாழ்க்கை நெறி. சைவம், சித்தம், சந்தம் என்பதில், சைவம் சிவனோடு தொடர்புடையது; சித்தம் முடிவான உண்மை; அந்தம் முடிந்த முடிவு. சிவ ஆகமங்களின் முடிந்த முடிவே, சைவசித்தாந்தம். பதி இறை, பசு உயிர், பாசம் தலை ஆகிய மூன்றும், தொடக்கம் இல்லா மூவா முப்பொருள். பதி, பசு, பாசம் விளக்கி நிற்பதே, சிவ ஆகம நெறியின் சைவ சித்தாந்தம்.

சிவத்துக்கும் உலகிற்கும் உள்ள தொடர்பு சைவம். உயிர்களுக்கும் உலகிற்கும் உண்டாகும் தொடர்பு சிவத்தால் ஆனது. அதனால், அத்தொடர்பும் சைவமே. இவ்மூவகை தொடர்புகளையும் ஓதி, மக்களை வாழ வைப்பது சைவ சித்தாந்தம். சைவ சமயத்தில் பிறந்த நாம், மதம் மாறி போய் விடக்கூடாது.

நம் மனதை மாற்றும் செயல்களை செய்வார்கள், அதில், நாம் கவனமாக இருப்பது அவசியம். சைவ சமயத்தவர்கள், சைவ நெறிகளை கடைப்பிடிக்க வேண்டும். தற்போது, பெண்கள் குங்குமம் வைப்பது குறைந்து வருகிறது. மாறாக, 'ஸ்டிக்கர்' பொட்டு வைத்துக் கொள்கின்றனர். இதை தவிர்த்து, நமது நெறிகளை ஏற்று நடக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

எங்கள் மடத்தின் பல்லிகள்கூட பதி, பசு, பாசம் பற்றித்தான் பேசும்



“எங்களுடைய தம்பிரான்கள், அடியவர்கள் மட்டுமின்றி, எங்களது மடத்தில் உள்ள பல்லிகள் கூட, பதி, பசு, பாசத்தை பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கும்,” என, தருமபுரம் ஆதீனம் பேசினார்.

தருமபுரம் ஆதீனம், 27வது குருமகா சந்நிதானம் கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பேசியதாவது:

சைவ சித்தாந்த அனைத்துலக மாநாடு, 1984ம் ஆண்டு, 26வது மகா சந்நிதானத்தால் துவக்கப்பட்டது. ஐந்து இடங்களில் இந்த மாநாடு நடத்தப்பட்டு, தற்போது ஆறாவது மாநாடு நடக்கிறது. சைவ சித்தாந்தம் என்பது முடிந்த முடிவு.

எங்களுடைய தருமை ஆதீனத்தின் முனிபுங்கவர், கர்நாடகா மன்னரை சந்திக்க சென்றபோது, 'உங்கள் ஆதீனத்து அடியார்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றனர்' என்று கேட்டதற்கு, அவர் சொன்ன பதிலை கேட்டு, உடனடியாக அந்த மன்னர், 1,000 வேலி நிலம் எழுதி கொடுத்து, அந்தப்பணி தொடர வேண்டும் என்றார்.

எங்களுடைய தம்பிரான்கள், அடியவர்கள் மட்டுமின்றி, எங்களது மடத்தில் உள்ள பல்லிகள் கூட, பதி, பசு, பாசத்தை பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கும். இதை, 'கவுலி உரைக்கும் பதி, பசு, பாசத்தின் உண்மைகளே' என்று, ஞானபிரகாச மாலை நுால் காட்டுகிறது.

இங்குள்ள, 18 ஆதீனங்களின் கொள்கை, சைவ சித்தாந்தத்தை பரப்புவது. இதற்கு, சிவபெருமான் துவங்கி, அகச்சந்தானம், புறச்சந்தானம் வழியாக வரும் ஆதீனங்கள் தான், இந்த 18 ஆதீனங்கள். அதில் மெய்கண்டாருக்கு பின் தோன்றிய 14 நுால்கள், சைவ சித்தாந்தத்தை காட்டுகின்றன.

இதற்கு மூலமாக இருப்பது பன்னிரு திருமுறைகள். இந்த மாநாட்டில், 75 நுால்கள் வெளியிடப்பட உள்ளன.

மேலும், 14 நாடுகளை சேர்ந்தவர்கள், மாநாட்டிற்கு வருகை தந்துள்ளனர். மாநாட்டின் மூன்றாம் நாள் நிறைவு விழாவில், 300 கட்டுரைகள் நான்கு தொகுதிகளாக வெளிவர உள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.


'

விழிகளில் வழியும் கண்ணீரை துடைப்பது தான் சைவ சமயம்!'



“விழிகளில் வழியும் கண்ணீரை துடைப்பது தான் உண்மை சமயம்; அது, சைவ சமயம்,” என, குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேசினார்.

அவர் பேசியதாவது: எவருக்கும் கிடைக்காத மரணத்தை தள்ளிப் போடுகிற மாமருந்தான நெல்லிக்கனி, அதியமானுக்கு கிடைத்தது. தமிழ் இந்த மண்ணில் வாழ வேண்டும் என்பதற்காக, அதியன் அதை உண்ண விரும்பாது, அவ்வைக்கு தந்தான்.

சைவம் என்பது தத்துவம் மட்டுமல்ல; வாழ்க்கை முறை. வாழ்க்கை, மனைவி, மக்கள், உறவுகள், சுற்றம், நட்பு என எல்லாம் பொய்.

வீட்டை விட்டு ஓடு; இடுகாட்டை நோக்கி ஓடு என, புறநெறிகள் இங்கு படையெடுப்புகள் நடத்தின. என் வாழ்க்கை எப்படி பொய்யாகி போகும்?

எனக்காக இன்பத்தில், துக்கத்தில், நன்மையில், தீமையில், வாழ்வில், தாழ்வில், ஏற்றத்தில், இறக்கத்தில், அழுதும், சிரித்தும், மகிழ்ந்தும் இருந்த வாழ்க்கை துணைநலம் எப்படி பொய்யாகி போகும் என கேட்டது தான், சைவ சமயத்தின் சாரம். வாழ்வதற்கான வாழ்க்கை என, சைவ சித்தாந்தம் கூறுகிறது.

'மருது சகோதரர்கள் சரணடையவில்லை எனில், காளையார்கோவில் ராஜகோபுரத்தை வெடிவைத்து தகர்ப்போம்' என, ஆங்கிலேயர் மிரட்டினர்.

ஆட்சி, அதிகாரம் கைவிட்டு போனதற்கு கவலைப்படாத மருது சகோதரர்கள், கோபுரத்தை இழக்க தயாராக இல்லை.

எனவே, தங்கள் தலையை தந்து, ராஜகோபுரத்தை மீட்டனர். அதேபோலத் தான், தேர் செய்து, உயிர் தியாகம் செய்த, குப்பமுத்து ஆச்சாரியின் வரலாறும் உள்ளது.

ஒரு நாட்டின் மன்னன் தன் பதவியை விட, அதிகாரத்தை விட, சமயம் தான் பெரிது என நினைக்கிறான்.

ஒரு நாட்டின் கலைஞன், தன் உயிரை விட சமயம் தான் பெரிது என்று நினைக்கிறான். இதுதான் காலம் காலமாக நம் சமூகம் கடந்து வந்த சமயம் மற்றும் பக்தி நெறி.

எல்லா நிலையிலும், எது நம் சமயம் என்ற கேள்விக்கு, நால்வர் பெருமக்கள் விடை தந்துள்ளனர். விழிகளில் வழியும் கண்ணீரை துடைப்பது தான் உண்மை சமயம்; சைவ சமயம்.

இவ்வாறு அவர் பேசினார்.



- நமது நிருபர் குழு -

Advertisement