கோடை விடுமுறையை பயனுள்ளதாக மாற்றுங்க!

முழு ஆண்டு தேர்வுகள் முடிந்து, பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதம் முடிந்து, ஜூன், 2 ல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. கோடை விடுமுறை நாட்களில் மாணவர்களின் பாதுகாப்பை பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டும் என பள்ளிகல்வித்துறை பல அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

 கோடை வெப்பம் தொடர்ந்து அதிகமாகி வருவதால், வெளிப்புற விளையாட்டுகளின் போது அதிகளவு தண்ணீரை குடிக்க செய்ய வேண்டும். விடுமுறை நாட்களில் சில மாணவர்கள் தங்கள் உடல் மற்றும் மனநலனை பாதிக்கும் சவால்களை எதிர்கொள்ள நேரிடும்.

 தனிமை உணர்வுகளை தடுக்க நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து விளையாடுதல், ஒன்றாக அமர்ந்த உணவருந்துதல், இசை நிகழ்ச்சிகளை கவனித்தல் ஆகியவற்றின் மூலம் சமூக தொடர்புகளை ஊக்குவிக்கவும், மனநலனை பேணவும் முடியும்.

 டிவி, மொபைல் போன் பார்ப்பதில் அதிக நேரத்தை செலவிடுவதை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும். இயன்றவரை அவர்களுடன் நேரத்தை செலவிட்டு விடுமுறை நாட்களை உபயோகமாக்க வேண்டும்.

 உடல் ஆரோக்கியத்துக்கு விடுமுறை நாட்களிலும் சமச்சீரான உணவு அவசியம். எனவே, பாரம்பரிய உணவு, பழங்கள் அதிகளவில் சாப்பிடுவதை ஊக்கப்படுத்தலாம். தினமும் இருவேளை பல் துலக்கி, குளிக்க, பெரியோரை மதிக்க, அவர்களுக்கு உதவி செய்யும் பழக்கங்களை கற்றுத்தர வேண்டும்.

 விடுமுறை நாட்களில் கடல், ஆறு, ஏரி, குளம், குட்டை போன்ற நீர்நிலைகளில் குளிப்பதற்கு பெற்றோர் அனுமதிக்க வேண்டாம். சுற்றுலா செல்லும் போது பெற்றோர் கட்டாயம் உடனிருக்க வேண்டும்.

 இசை, நடனம், ஓவியம் போன்றவற்றில் ஆர்வமுள்ள மாணவர்கள் விடுமுறை நாட்களை பயன்படுத்தி அவற்றை கற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தி தரலாம்.

 அருகில் உள்ள பொது நுாலகங்களுக்கு அழைத்துச் சென்று ஒரு மணி நேரமாவது புத்தகங்களை படிக்க ஊக்குவிக்கலாம். மகன், மகளின் ஆர்வத்தை பொறுத்து காமிக்ஸ், சிறார் கதை மற்றும் நீதிநுால்கள் படிக்க கற்றுத்தரலாம்.

Advertisement