வருத்தம் தெரிவித்தார் பாடகர் சோனு நிகம்

பெங்களூரு: கன்னடர்கள் குறித்த தன் பேச்சுக்கு பாடகர் சோனு நிகம் வருத்தும் தெரிவித்துள்ளார்.

பெங்களூரின் கல்லுாரி ஒன்றில் மே 1ம் தேதி நடந்த இசை நிகழ்ச்சியில் பிரபல பின்னணி பாடகர் சோனு நிகம் பங்கேற்றார். அப்போது கன்னட பாடல் பாடும்படி ஒரு மாணவர் கோஷமிட்டார்.

இதை பஹல்காம் சம்பவத்துடன் ஒப்பிட்டு சோனு நிகம் பேசியிருந்தார். இது கன்னடர்களை உசுப்பேற்றியுள்ளது.

'கன்னட பாடலுக்கும், பயங்கரவாதிகள் தாக்குதலுக்கும் என்ன சம்பந்தம்? மக்களிடம் சோனு நிகம் மன்னிப்பு கேட்க வேண்டும்' என, கண்டன குரல்கள் ஒலிக்கத் துவங்கின. அது மட்டுமின்றி, அவலஹள்ளி போலீஸ் நிலையத்தில் பாடகர் மீது புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சோனு நிகம் மீது வழக்குப் பதிவானது.

இதையடுத்து சோனு நிகம், வருத்தம் தெரிவித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:

நான் யாரையும் நோகடிக்கும் நோக்கில், அந்த வார்த்தையை கூறவில்லை. அது எதார்த்தமாக வந்த வார்த்தை.

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில், மாணவரிடம் ஒரு விதமான ரவுடியிசம் இருந்தது. இத்தகைய மனப்போக்குக்கு எதிராக நான் பேசினேன். இது போன்ற மூர்க்கமான மனப்போக்கால், பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடந்தது. அது விவாதத்துக்கு காரணமானது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement