கூலிப்படையுடன் சென்று தாய்மாமாவை தாக்கிய மருமகள்

பெங்களூரு: சொத்துத் தகராறில், தாய்மாமாவை கூலிப்படையினருடன் வந்து தாக்கிக் கொல்ல முயன்ற ரவுடி மருமகளை போலீசார் தேடி வருகின்றனர்.

பெங்களூரின் மஹாதேவபுராவில் வசிப்பவர் பாப்பையா பிரபு. கொடிகேஹள்ளியில் இவருக்கு சொந்தமான 3.38 ஏக்கர் நிலம் உள்ளது. இது பரம்பரை சொத்து.

இந்த நிலத்தில் பாப்பையா பிரபுவின் சகோதரி வஜ்ரம்மா பங்கு கேட்டு வருகிறார். இதனால் இருவருக்கும் இடையே நீண்ட காலமாக தகராறு இருந்து வருகிறது.

சொத்தில் பங்குள்ளதாகக் கூறி, நீதிமன்றத்தில் வஜ்ரம்மா வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த நிலம் தொடர்பாக பாப்பையாவுக்கு வஜ்ரம்மா தொல்லை கொடுத்தார். இவருக்கு இவரது மகள் ஸ்ருதி, 32, பக்கபலமாக இருக்கிறார்.

ஸ்ருதி, பெங்களூரு மாநகராட்சி அலுவலகத்தில், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டராக பணியாற்றுகிறார். இவர் பெண் ரவுடி என்று கூறப்படுகிறது.

தாய்க்கு ஆதரவாக தன் தாய்மாமா பாப்பையா பிரபுவிடம், ஸ்ருதி பல முறை சண்டை போட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பு, கூலிப்படையினருக்கு பணம் கொடுத்து, தன்னுடன் அழைத்துக் கொண்டு மஹாதேவபுராவில் உள்ள, தாய்மாமாவின் வீட்டுக்குச் சென்றார்.

நிலத்தில் பங்கு கேட்டு, பாப்பையா குடும்பத்தினரை தாக்கியுள்ளனர். வீட்டுக்குள் சென்று கதவை பூட்டி, அவர்களிடம் இருந்து பாப்பையா குடும்பம் தப்பித்துள்ளது.

அப்போதும் ஸ்ருதியும் கூலிப்படையினரும் அரிவாளால் கதவை, ஜன்னலை பலமாக தாக்கி சேதப்படுத்தினர். அச்சமடைந்த பாப்பையா பிரபு, போலீசாரை தொடர்பு கொண்டு, ரவுடிகள் அட்டகாசம் செய்வதை விவரித்து, காப்பாற்றும்படி வேண்டினார்.

போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆனால் அதற்குள் ஸ்ருதியும், கூலிப்படையினரும் தப்பிவிட்டனர். பாப்பையா பிரபு கொடுத்த புகாரின்படி, ஸ்ருதி கும்பலை போலீசார் தேடுகின்றனர்.

பாப்பையா பிரபுவின் வீட்டை ரவுடிகள் தாக்குவது, கதவு, ஜன்னலை உடைத்து பலமாக தாக்கி சேதப்படுத்தும் வீடியோ, சமூக வலைதளங்களில் நேற்று வெளியானது. அதன் பின்னரே இந்த சம்பவம், வெளிச்சத்துக்கு வந்தது.

Advertisement