ஆசிய கோப்பை நடக்குமா... விரட்டி அடிக்கப்படுமா பாகிஸ்தான்

புதுடில்லி: பஹல்காம் தாக்குதல், கிரிக்கெட் அரங்கிலும் பாகிஸ்தானுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆசிய கோப்பை தொடரில் இருந்து நீக்கப்படலாம்.


எல்லை தாண்டிய பயங்கரவாதம் காரணமாக, இந்திய துணை கண்டத்து நாடுகள் இடையே கிரிக்கெட் தொடர் நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வரும் செப்டம்பரில் இந்தியா, இலங்கையில் ஆசிய கோப்பை தொடர் (டி-20) நடக்க உள்ளது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உட்பட 6 அணிகள் பங்கேற்க உள்ளன.

இந்தச்சூழலில், காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியாகினர். இதையடுத்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் ஏற்படும் பதட்டமான நிலை உருவாகியுள்ளது. இதனால், ஆசிய கோப்பை தொடரில் இருந்து பாகிஸ்தான் நீக்கப்படலாம் அல்லது தொடர் ரத்து செய்யப்படலாம்.

இதே போல இந்தியாவுக்கு எதிராக வங்கதேச முன்னாள் ராணுவ அதிகாரி ரஹ்மான் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதன் காரணமாக வரும் ஆகஸ்டில் இந்திய அணி, வங்கதேசம் சென்று பங்கேற்க இருந்த 'டி-20', ஒருநாள் தொடர் ரத்து செய்யப்படலாம்.


ஆசிய கவுன்சில் கலைப்புதற்போது ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக பாகிஸ்தானின் மொசின் நக்வி உள்ளார். இந்தியாவுடன் உறவு சரியில்லாததால், இந்த கவுன்சில் கலைக்கப்படலாம்.

இது பற்றி இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் கூறியது: மத்திய அரசு என்ன சொல்கிறதோ, அதை தான் இந்திய கிரிக்கெட் போர்டு பின்பற்றும். இந்த ஆண்டு ஆசிய கோப்பை தொடர் இந்தியா, இலங்கையில் நடக்க உள்ளன. தற்போதைய நிலையில், பாகிஸ்தான் பங்கேற்க வாய்ப்பு இல்லை. ஆசிய கிரிக்கெட் கவுன்சிலே கலைக்கப்படலாம். ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில் இருந்து இந்தியா விலகலாம். ஆசிய கோப்பைக்கு பதில் மூன்று அல்லது நான்கு நாடுகள் பங்கேற்கும் தொடர் நடத்தப்படலாம். ஹாங்காங் அல்லது ஐக்கிய எமிரேட்ஸ் அணிகளுக்கு அழைப்பு விடுக்கப்படலாம்.

அடுத்த இரு மாதங்களில் என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்து, மாற்றங்கள் ஏற்படும். இரு நாடுகள் இடையே மோதல் போக்கு நிலவும் சூழலில், விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பது கடினம்.


இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.

Advertisement