இந்தியா - பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தம் இறுதியானது: பிரதமர் மோடி மகிழ்ச்சி

புதுடில்லி: இந்தியா - பிரிட்டன் இடையே தடையற்ற ஒப்பந்தத்திற்கான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இங்கிலாந்து பிரதமர் ஸ்டார் கெய்மரை இந்தியா வரும்படி அழைப்பு விடுத்து உள்ளார்.
தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வது தொடர்பாக இந்தியா - பிரிட்டன் இடையே கடந்த 2022ம் ஆண்டு முதல் பேச்சுவார்த்தை நடந்துவந்தது. பிரிட்டன் பிரதமராக இருந்தபோரீஸ் ஜான்சன் ஆட்சி காலத்தில் இந்த பேச்சுவார்த்தை துவங்கினாலும், இந்தியர்களுக்கு விசா, பிரிட்டன் ஏற்றுமதி செய்யும் கார் மற்றும் மதுபானத்திற்கான வரி விகிதம் தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே இழுபறி நீடித்து வந்தது.
இச்சூழ்நிலையில், அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு ஏற்பட்டதைதொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இறுதியாகி உள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பிரதமர் மோடி- பிரிட்டன் பிரதமர் ஸ்டார் கெய்மர் இருவரும் தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினர். அப்போது, இரு நாட்டு தலைவர்களும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதற்கு இருவரும் வரவேற்பு தெரிவித்தனர். இந்த ஒப்பந்தம், இரு தரப்புக்கும் பலனளிக்கும். இதனால், வர்த்தகம், முதலீடு, கண்டுபிடிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியன அதிகரிக்கும்.
இந்த ஒப்பந்தம் மூலம் உலக நாடுகளுக்கான சந்தைகளை திறப்பதடன், புதிய தொழில் வாய்ப்புகளையும், மக்களுக்கு இடையிலான தொடர்புகளையும் அதிகரிக்கும்.
இந்தியா - பிரிட்டன் இடையே பொருளாதார மற்றும் வர்த்தக உறவை அதிகரிக்க இருவரும் ஒப்புக் கொண்டனர். இந்த ஆலோசனையின் போது ஸ்டார் கெய்மரை இந்தியா வர வேண்டும் என மோடி அழைப்பு விடுத்தார். இரு தலைவர்களும் தொடர்ந்து தொடர்பில் இருக்க ஒப்புக் கொண்டு உள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
