வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்ட செயலாக்கம் எப்போது: இஸ்ரோ தலைவர் தகவல்

1

புதுடில்லி: விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் 'ககன்யான்' திட்டம் 2027ம் ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் செயல்படுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.


பிரதமர் நரேந்திர மோடி 2018ம் ஆண்டு தனது சுதந்திர தின உரையின் போது "ககன்யான்" திட்டத்தை அறிவித்தார்.

கோவிட் தொற்றுநோய் காரணமாக விண்வெளி வீரர்களின் பயிற்சி பாதிக்கப்பட்டதாலும், இந்த பணிக்குத் தேவையான முக்கியமான தொழில்நுட்பங்களில் தேர்ச்சி பெறுவதில் உள்ள சிக்கல்கள் காரணமாகவும் இந்த திட்டம் பல தாமதங்களை சந்தித்தது. குழுவினருடன் கூடிய இந்த பணி 2025ல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பின்னர் 2026க்கு திட்டமிடப்பட்டது. இப்போது அது 2027 ஜனவரி- மார்ச் இடையிலான காலகட்டத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் தலைவர் வி.நாராயணன் டில்லியில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:

ககன்யான் - விண்கலனை விண்வெளிக்கு செலுத்தும் திட்டம் 2027ம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதத்திற்கு இடையே தள்ளப்பட்டுள்ளது, இது அசல் அட்டவணையை விட கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் தாமதமாக உள்ளது.
ஏனெனில் இது போன்ற சிக்கலான திட்டங்களுக்கான தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

வீரர்கள் இன்றி விண்வெளிக்கு விண்கலம் செலுத்தும் பயணத்திட்டம் இந்தாண்டில் இரண்டு முறை மேற்கொள்ளப்படும்.

அதைத் தொடர்ந்து 2026ம் ஆண்டிலும் இதேபோன்ற இரண்டு பயணங்கள் மேற்கொள்ளப்படும்.
வீரர்களைக் கொண்ட விண்கலத்தின் பயணம் 2027ம் ஆண்டின் முதல் காலாண்டில் செலுத்த இலக்கு வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நாரயணன் கூறினார்.

Advertisement