தியாகி ஒதுக்கீட்டில் வீடு வாரியம் பரிசீலிக்க உத்தரவு

சென்னை:சுதந்திர போராட்ட தியாகிக்கு வீடு ஒதுக்குவது குறித்து பரிசீலிக்குமாறு, தமிழ்நாடு வீட்டுவசதி துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அகில இந்திய சுதந்திர போராட்ட தியாகிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் வி.கே.செல்வம் தாக்கல் செய்த மனு:

இந்திய ராணுவத்தில் பணியாற்றிய முன்னாள் ராணுவ வீரர்களுக்கு, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய வீடுகளில், ஒரு சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது.

நானும் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியவன். எனக்கு தியாகிகளுக்கான இட ஒதுக்கீட்டில் வீடு ஒதுக்கக்கோரி, அரசுக்கும், வாரிய தலைவருக்கும் மனு கொடுத்தேன்; என் மனு பரிசீலிக்கப்படவில்லை.

இதையடுத்து, உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், என் மனுவை அரசு பரிசீலிக்குமாறு, 2021ல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, வீட்டுவசதி வாரியத்துக்கு, 2025 பிப்., 10ம் தேதி மனு கொடுத்தேன். ஆனால், என் மனு நிராகரிக்கப்பட்டு விட்டது. எனக்கு வீடு ஒதுக்குமாறு, வாரியத்திற்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.பரத சக்கரவத்தி, 'இந்த விவகாரத்தில், அரசு தன் அதிகாரத்தை பயன்படுத்தி, வீடு ஒதுக்கீடு செய்யலாம்.

மனுதாரரின் மனுவை பரிசீலித்து, அனுமதிக்கப்பட்ட ஒதுக்கீட்டில் சட்டத்திற்கு உட்பட்டு, எட்டு வாரங்களில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

Advertisement