அமைச்சர் வருகைக்காக காத்திருந்து சோர்ந்து படுத்து துாங்கிய பெண்கள்

அரூர்,:தர்மபுரி மாவட்டம், அரூர் தாலுகா, கோட்டப்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், பழங்குடியின மக்களுக்கு பல்வேறு துறைகள் சார்பில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது.

விழாவில் பங்கேற்க, அரூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பெண் பயனாளிகள் விழா நடந்த இடத்திற்கு, காலை, 8:00 மணிக்கே வரவழைக்கப்பட்டனர்.

விழா, 12:30 மணிக்கு நடக்கும் என, அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மாலை, 3:00 மணி வரை, மாவட்ட பொறுப்பு அமைச்சரான வேளாண்மை துறை அமைச்சர் பன்னீர்செல்வம் விழா நடந்த இடத்திற்கு வரவில்லை.

இதனால், பல மணி நேரமாக, குழந்தைகளுடன் காத்திருந்த பெண்கள் மற்றும் மூதாட்டிகள் சோர்வடைந்தனர்.

ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த பெண்கள், தங்களை அழைத்து வந்த அரசு ஊழியர்களிடம், அமைச்சர் வருவாரா, இல்லையா என, அடிக்கடி கேட்டுக் கொண்டே இருந்தனர். சிலர் இருக்கையில் அமர்ந்தவாறும், பல பேர் தரையிலும் படுத்து துாங்கினர்.

அச்சல்வாடியை சேர்ந்த பெண்கள் கூறுகையில், 'எங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்குவதாக கூறி அழைத்தனர். எங்கள் ஊரில் இருந்து மினி சரக்கு வாகனத்தில், 50 கி.மீ., துாரம் பயணம் செய்து காலை, 8:00 மணிக்கு மண்டபத்திற்கு வந்துவிட்டோம். அமைச்சர் வரவில்லை.

'வயதான பெண்கள் நீண்ட நேரம் சேரில் அமர முடியாமல் சிரமப்பட்டனர். மேலும், அவர்கள் சோர்வடைந்ததால் கீழே படுத்து விட்டனர்' என்றனர்.

Advertisement