திருவள்ளூர் கோவில் குளத்தில் மூழ்கி வேத பாடசாலை மாணவர்கள் மூவர் பலி

திருவள்ளூர்:திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் நடைபெற்று வரும் சித்திரை பிரம்மோத்சவத்தில், வேதபாராயணம் படிக்க வந்த மாணவர்கள் மூவர், கோவில் குளத்தில் நீராடும்போது, நீரில் மூழ்கி பரிதாபமாக பலியாகினர்.
திருவள்ளூரில், 108 வைணவ தலங்களில் ஒன்றான வீரராகவ பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோத்சவம் நடைபெற்று வருகிறது.
இவ்விழாவில் வேதபாராயணம் செய்ய, சென்னை சேலையூரில் உள்ள வேதபாடசாலையில் இருந்து எட்டு மாணவர்கள், ஆறு நாட்களுக்கு முன் இக்கோவிலுக்கு வந்தனர். தினமும் அதிகாலை, கோவில் குளம் ஹிருதாபநாசி நீர்நிலையில் புனித நீராடி, சந்தியாவதனம் செய்த பின், வேதபாராயணம் படிப்பது வழக்கம்.நேற்று காலை, வேதபாராயணம் செய்ய எட்டு மாணவர்களும் வந்தனர்.
இதில், ஐந்து பேர் மட்டுமே, குளத்தின் படிக்கட்டுகளில் இறங்கி நீராடி கொண்டிருந்தனர். மற்றவர்கள் கரையில் இருந்தனர்.
அப்போது, குன்றத்துாரைச் சேர்ந்த மணிவண்ணன் மகன் ஹரிஹரன், 16, என்பவர் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கினார்.
அவரை காப்பாற்றும் முயற்சியில், அம்பத்துாரைச் சேர்ந்த சுதர்சன் மகன் வெங்கட்ராமன், 19, விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலைச் சேர்ந்த ரவிசந்திரன் மகன் வீரராகவன், 24, ஆகியோர் ஈடுபட்டனர்.
அப்போது, மூவரும் குளத்தில் மூழ்கி தத்தளித்தனர். குளக்கரையில் நின்றிருந்தோர் இதை பார்த்து கூச்சலிட்டனர்.
உள்ளூர்வாசிகள், திருவள்ளூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் அளித்தனர். அவர்கள் வருவதற்குள், குளத்தில் மூழ்கிய மூவரும் மூச்சுத்திணறி தண்ணீரில் மூழ்கினர். தீயணைப்பு வீரர்கள், மூவரையும் சடலமாக மீட்டனர்.
திருவள்ளூர் நகர காவல் துறையினர், மூவரின் சடலத்தை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இதையடுத்து, சம்பவம் நடந்த கோவில் குளத்தை ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சித்திரை பிரம்மோத்சவ விழாவில், கோவில் குளத்தில் மூழ்கி மூன்று மாணவர்கள் உயிரிழந்திருப்பது, பக்தர்களிடமும், அப்பகுதியைச் சேர்ந்தோரிடமும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரிகளுக்கு தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, மாணவர்கள் அருகில் உள்ள ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் குளித்து வருகின்றனர்.மாவட்டத்தில், பூண்டி நீர்த்தேக்கம், பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் ஏரிகளில் தேங்கியுள்ள தண்ணீரில் மாணவர்கள், சிறுவர்கள் ஆர்வமாக குளித்து வருகின்றனர். எவ்வித பாதுகாப்பு துணையுமின்றி நீர்நிலைகளில் குளிப்பதால், சிலர் நீச்சல் தெரியாமல் தண்ணீரில் மூழ்கி உயரிழக்க நேரிடுகிறது.கோடை காலத்தில் சிறுவர் மற்றும் இளைஞர்கள், நீர்நிலைகளில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். காவல்துறையினரும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.