ரூ.2.50 லட்சம் திருட்டு பெரம்பலுார் வாலிபர் கைது

ஆத்துார்,:நாமக்கல் மாவட் டம் ராசிபுரம், கருப்பன்சோலையை சேர்ந்த, விவசாயி பாலாஜி, 36. இவர் கடந்த, 2ல், தம்மம்பட்டியில் உள்ள வங்கியில், விவசாய கடனாக பெற்ற, 4 லட்சம் ரூபாயை, பைக் டேங்க் கவரில் வைத்துக்கொண்டு, உடையார்பாளையத்தில் உள்ள சொட்டு நீர் குழாய் விற்பனை கடைக்கு சென்றார்.

அப்போது அவரது பணத்தில், 2.50 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். தம்மம்பட்டி போலீசார், 'சிசிடிவி' கேமராவை ஆய்வு செய்தபோது, பைக்கில் வந்த இருவர், பணத்தை திருடியது தெரிந்தது. விசாரணையில் பெரம்பலுார் மாவட்டம் வேப்பந்தட்டை, கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த துரை, அன்பு என தெரிந்தது. அதில், துரை, 31, என்பவரை, நேற்று கைது செய்த போலீசார், 2.50 லட்சம் ரூபாயை மீட்டனர். அன்புவை தேடிவருகின்றனர்.


Advertisement