போக்குவரத்து எஸ்.ஐ., மீது கல் வீசி தாக்கியவர் கைது
நீலாங்கரை, நீலாங்கரை போக்குவரத்து சப் - இன்ஸ்பெக்டர் ரங்கநாதன், 55. இவர், நேற்று முன்தினம் இரவு, இ.சி.ஆர்., அக்கரை சிக்னலில், போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார்.
அப்போது, போதையில் நடந்து வந்த ஒருவர், வாகனங்களுக்கு இடையூறாக சாலையின் நடுவே நின்றார். அவரை அங்கிருந்து நகர்ந்து செல்லும்படி, ரங்கநாதன் வலியுறுத்தினார்.
அவரின் பேச்சை கேட்காத அந்த நபர், சாலையிலேயே நின்றார். மீண்டும் சத்தம் போட்டதால், அங்கிருந்து நகர்ந்து சென்ற போதை நபர், சாலையில் கிடந்த கல்லை எடுத்து ரங்கநாதன் மீது வீசினார்.
இதை சற்றும் எதிர்பாராத ரங்கநாதனின் பின் தலையில் கல் பட்டு, பலத்த காயம் ஏற்பட்டது. அவர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சக போக்குவரத்து போலீசார், தாக்கிய நபரை பிடித்து, நீலாங்கரை போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், போதை ஆசாமி வெட்டுவாங்கேணியை சேர்ந்த ரவி, 35, என தெரிந்தது. போலீசார், அவரை கைது செய்தனர்.