விருத்தாசலத்தில் புதிய பஸ் நிலையம் நகருக்குள் இடம் இருந்தும் நடவடிக்கை இல்லை; அமையுமா?

விருத்தாசலம் : விருத்தாசலம் நகருக்குள் பாழாகும் பல ஏக்கர் நிலங்களை பயன்படுத்தி புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை - ஜெயங்கொண்டம், கடலுார்-திருச்சி, சிதம்பரம்-சேலம் மார்க்கத்தில், விருத்தாசலம் முக்கிய சந்திப்பு. பஸ், லாரி, கார் உட்பட ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. கடலுார் துறைமுகம், நெய்வேலி என்.எல்.சி., இந்தியா நிறுவனம், சேத்தியாத்தோப்பு, பெண்ணாடம், ஏ.சித்துார் சர்க்கரை ஆலைகள், சிமென்ட் ஆலைகளுக்கு மூலப்பொருட்கள், உற்பத்திப் பொருட்களை ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்களும் செல்கின்றன.

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் அப்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப கட்டப்பட்ட பஸ் நிலையம் கட்டப்பட்டது. ஆனால், தற்போதைய நிலையில், பயணிகள் எண்ணிக்கைக்கேற்ப போதுமான குடிநீர், கழிவறை, இருக்கை வசதிகள், போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வறை உள்ளிட்ட வசதிகள் தன்னிறைவாக இல்லை.

விருத்தாசலம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை 1, 2 ஆகியவற்றில் இருந்து பெருநகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும், கடலுார், விழுப்புரம், கும்பகோணம், சேலம், மதுரை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் அரசு பஸ்கள், தனியார் பஸ்கள் வந்து செல்வதால் நிறுத்துவதற்கு போதுமான இடவசதியின்றி பயணிகள், ஊழியர்கள் மிகுந்த சிரமமடைகின்றனர்.

இதை தவிர்க்கும் வகையில், புதிதாக புறநகர் பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் செராமிக் தொழிற்பேட்டை, புறவழிச்சாலை ஆகியவற்றில் இடம் தேர்வு செய்யப்பட்டும் நடைமுறைக்கு வரவில்லை.

மேலும் தனியார் நிலங்களையும் அதிகாரிகள் பார்வையிட்ட நிலையில், புதிய பஸ் நிலைய திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், சிட்டிங் எம்.எல்.ஏ., ராதாகிருஷ்ணன் சட்டசபையில் விடுத்த கோரிக்கைக்கு பதிலளித்த அமைச்சர் நேரு, 'விருத்தாசலம் தொகுதி தனக்கு பரீட்சயமானது. 5 ஏக்கர் நிலம் இருந்தால் உடனடியாக பஸ் நிலையம் கட்டலாம்.

தனியாரிடம் இருந்தாலும் விலைக்கு வாங்கி, பஸ் நிலையம் கட்டித் தரப்படும்' என்றார். அமைச்சரின் பேச்சு, விருத்தாசலம் மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும், அதற்கான பூங்வாங்க பணிகள் துவங்கவில்லை.

விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பூட்டியே கிடக்கும் டான்காப் தொழிற்சாலை 10 ஏக்கரில் பாழடைந்து கிடக்கிறது. அதுபோல், செராமிக் தொழிற்பேட்டை, கற்குழாய் தொழிற்சாலை ஆகியவற்றில் 20 ஏக்கருக்கு மேலான நிலங்கள் முட்புதர் மண்டி, பயன்பாடின்றி பாழாகிறது. இதனை சீரமைத்து பஸ் நிலையம் கட்டினால், நகருக்குள் பஸ் நிலையம் அமைக்க முடியும்.

இதன் மூலமாக விருத்தாசலம்-உளுந்துார்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள ரயில் நிலையத்திற்கு பயணிகள் எளிதில் சென்று வர முடியும். தற்போதைய பஸ் நிலையத்திற்குள் டவுன் பஸ்களை மட்டும் அனுமதித்து, புதிய பஸ் நிலையத்திற்கு நெடுந்துார பஸ்களை அனுமதிக்கலாம்.

இது குறித்து மாவட்ட அமைச்சர் கணேசன் முயற்சி எடுத்து, கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி புதிய பஸ் நிலையம் அமைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement