காவல் துறை சிறப்பு பிரிவுகளில் மாற்றுப்பணியாக நீண்ட ஆண்டுகளாக பணியாற்றும் போலீசார் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் ஆள் பற்றாக்குறை
மதுரை : தமிழக காவல் துறையில் சிறப்பு பிரிவுகளில் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு மாற்றுப்பணியாக பணிபுரியும் போலீசாரில் பலர், தொடர்ந்து அங்கேயே இருப்பதால் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டு சட்டம் ஒழுங்கை காப்பதில் சிரமம் நீடிக்கிறது.
காவல் துறையில் 11,393 எஸ்.ஐ.,க்களும், போலீசார் 1,17,609 பேரும் பணியாற்றுகின்றனர்.
இதில் 1902 போலீஸ் ஸ்டேஷன்களில் ஆயிரக்கணக்கான போலீசார் பணியாற்றி வருகின்றனர். ஆயுதப்படை, பட்டாலியன் படைகளிலும் போலீசார் உள்ளனர். இதுதவிர சி.பி.சி.ஐ.டி., கியூ பிராஞ்ச், ஓ.ஐ.சி.யூ., என 15க்கும் மேற்பட்ட சிறப்பு பிரிவுகளிலும் போலீசார் பணியாற்றுகின்றனர். இப்பிரிவுகளுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட போலீஸ் எண்ணிக்கை போதுமானதாக இல்லாததால் மாற்றுப்பணியாக ஆயுதப்படை, பட்டாலியன் படையில் இருந்து ஆட்களை எடுத்து பயன்படுத்தி வருகின்றனர்.
இவர்கள் அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை மட்டுமே இப்பிரிவுகளில் பணியாற்ற முடியும். அதன்பிறகு பழைய இடத்திற்கு சென்றுவிட வேண்டும். சில பிரிவுகளில் மட்டும் இதை முறையாக பின்பற்றி வருகின்றனர்.
அதேபோல் உயர் அதிகாரிகள் வீடுகள், அலுவலகங்கள், முகாம் அலுவலகங்களிலும் குறிப்பிட்ட போலீசார் நீண்டகாலமாக பணியாற்றி வருகின்றனர். 'ஆர்டர்லி' முறை ஒழிக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் டி.ஜி.பி., அறிக்கை சமர்பித்த நிலையில் இன்னும் 'ஆர்டர்லி' முறை இருக்கிறது. சமீபத்தில் மதுரையில் நடந்த சாலை விபத்தில் சென்னை ஏட்டு ஒருவர் இறந்தார்.
இவர் இறக்கும் வரை ஓய்வுபெற்ற டி.ஜி.பி.,க்கு கார் டிரைவாக இருந்தவர். அதிகாரிகள் பணி ஓய்வு பெற்றாலும்கூட அரசு சம்பளத்தில் ' வீட்டு வேலையாட்களாக' போலீசார் பணியாற்றி வருகின்றனர்.
இப்படி போலீசாரில் நுாற்றுக்கணக்கானோர் 'மாற்றுப்பணியாக' இருப்பதால் திருவிழா நாட்களில் சட்டம் ஒழுங்கை காக்கவும், பாதுகாப்பு அளிக்கவும் வெளிமாவட்டங்களில் இருந்து போலீசாரை 'இரவல்' வாங்க வேண்டியுள்ளது.
மேலும் சிறப்பு பிரிவுகளில் பணியாற்றும் போலீசார் குறிப்பிட்ட மாதங்களுக்கு ஒருமுறை அளிக்கப்படும் கவாத்து உள்ளிட்ட எந்த பயிற்சியிலும் ஈடுபடுவதில்லை. இதனால் அவர்களின் உடல்நலம் பாதிக்கப்படுகிறது.
அதேநேரத்தில் சட்டம் ஒழுங்கு போலீசாருக்கு ஆள் பற்றாக்குறையால் கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டு மனஅழுத்தமும், உடல்நல பாதிப்பும் ஏற்படுகிறது.
இதை தவிர்க்க சிறப்பு பிரிவுகளில் பணியாற்றும் போலீசாரை குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டாயம் இடமாற்றம் செய்து சட்டம் ஒழுங்கு பிரிவிலும் அவர்கள் களப்பணியாற்ற டி.ஜி.பி., சங்கர்ஜிவால் உத்தரவிட வேண்டும்.