சந்தர்ப்பவாத கூட்டணியின் மனக்கணக்கு தவறாக முடியும்: முதல்வர்

சென்னை 'சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்தவர்களின் மனக்கணக்கு தப்புக்கணக்காகவே முடியும்' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

கட்சியினருக்கு அவர் எழுதியுள்ள கடிதம்:

தி.மு.க., அரசு இன்றுடன், ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 'எல்லார்க்கும் எல்லாம்' என்ற லட்சியத்துடன், அனைவருக்குமான அரசாக தி.மு.க., அரசு திகழ்கிறது. அடுத்த ஐந்தாண்டுகளும் இந்த நல்லாட்சி தொடரும் என்பதை, தமிழக மக்களின் மனநிலை காட்டுகிறது.

அரசியல் எதிரிகளால் நம் ஆட்சியை குறை சொல்ல முடியாத காரணத்தால், அவதுாறு சேற்றை வீசுகின்றனர்.

ஈரைப் பேனாக்கி, பேனை பேயாக காட்ட நினைக்கின்றனர். அதிகார அமைப்புகளை ஏவி, அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

இந்தப் பூச்சாண்டிகளுக்கு மிரள்வதற்கு தி.மு.க., அடிமை கட்சியல்ல; இது சுயமரியாதை இயக்கம்; தன்மானமும் தைரியமும் கொண்ட இயக்கம்; தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுக்கும் இயக்கம்; இந்தியாவுக்கு வழிகாட்டும் இயக்கம்.

'நாடு போற்றும் நான்காண்டு; தொடரட்டும் பல்லாண்டு' என்ற தலைப்பில், 868 ஒன்றியங்கள், 224 பகுதிகள், 152 நகரங்கள் என, 1,244 இடங்களில், 186 இளம் பேச்சாளர்கள் உள்ளிட்ட 443 பேச்சாளர்கள் பங்கேற்கும் சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் நடக்கவுள்ளன.

இனி ஓராண்டு காலம், நமக்கு தேர்தல் பணிகளே முதன்மையானதாக இருக்கும். அதற்கான செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டு, மாவட்டச் செயலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி நம் செயல்பாடுகள் அமைய வேண்டும். ஜூன் 1ல், மதுரையில் நடக்கவுள்ள பொதுக்குழுக் கூட்டத்தில், தேர்தல் பணிகள் குறித்து, இன்னும் விரிவான செயல் திட்டங்கள் முன்வைக்கப்படும்.

நம்மை எதிர்ப்பவர்கள் தங்கள் மேடைகளில் பொய்யாக, மோசமாக, ஆபாசமாக -அருவருப்பாகப் பேசினாலும், நம் பேச்சாளர்கள் கண்ணியக்குறைவான சொற்களைப் பயன்படுத்தக்கூடாது.

ஆட்சிக்கு வந்த நான்காண்டுகளில் சொன்னதைச் செய்தது மட்டுமின்றி, சொல்லாததையும் செய்து காட்டியிருக்கிறோம்.

அவற்றை எடுத்துச் சொன்னாலே போதும். குறை குடங்கள் கூத்தாடுவதுபோல, நிறைகுடமான நாம் இருக்க வேண்டியதில்லை.

சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்து, தமிழகத்துக்கு துரோகம் இழைப்பவர்களும், அவர்களின் மறைமுகக் கூட்டாளிகளும், தி.மு.க.,வை வீழ்த்தி விட முடியாதா என, தொடர் தோல்வியின் ஆற்றாமையில் தவிக்கின்றனர்.

அவர்களின் மனக்கணக்கு தப்புக் கணக்காகவே முடியும் என்பதை, சட்டசபை தேர்தலில் தமிழக மக்கள் போடும் கணக்கு தீர்மானிக்கும். நாம் மக்களிடம் செல்வோம். அவர்களுக்காக, தி.மு.க., அரசு செய்ததைச் சொல்வோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement