சித்தராமையா மீதான வழக்கு தள்ளுபடி

பெங்களூரு,: அரசின் சாதனைகளை விளம்பரம் செய்வதற்கு அரசுக்கு 68 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்படுத்தியதாக, முதல்வர் சித்தராமையா மீது தொடரப்பட்ட வழக்கை, மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கர்நாடகாவில் 2013 முதல் 2018 வரையிலான காங்கிரஸ் ஆட்சியில் சித்தராமையா முதல்வராக இருந்தார்.

அப்போது பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட பஸ் நிறுத்தங்களில், அரசின் சாதனைகளை மக்களுக்கு தெரியும் வகையில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டன.

இதனால் அரசுக்கு 68 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டதாகவும், இதுதொடர்பாக சித்தராமையா, அமைச்சர் ஜார்ஜ், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மஞ்சுநாத் பிரசாத், மணிவண்ணன், லட்சுமி நாராயண் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரியும், மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் பா.ஜ., முன்னாள் கவுன்சிலர் ரமேஷ், 2020ல் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை நீதிபதி சந்தோஷ் கஜனான் பட் விசாரித்தார். அரசு, மனுதாரர் தரப்பு வாதங்களும் கேட்கப்பட்டன. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

'பிரதிவாதிகள், அரசுக்கு 68 கோடி ரூபாயை இழப்பீடு செய்தனர் என்பதற்கு, எந்த ஆதாரமும் இல்லை.

'ஆதாரங்களை மனுதாரர் தரப்பும் கொடுக்கவில்லை' என்று கூறிய நீதிபதி, சித்தராமையா உள்ளிட்டோர் மீதான வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Advertisement