மீஞ்சூர் அரசு பள்ளிக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி

மீஞ்சூர்:மீஞ்சூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இங்கு, 10ம் வகுப்பு முடிக்கும் மாணவர்கள், மேல்நிலை கல்வியை தொடர, அங்குள்ள தனியார் பள்ளிகளில் சேர வேண்டிய நிலை உள்ளது.

அரசு பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என, மீஞ்சூர் வியாபாரிகள், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

நுாற்றாண்டை கடந்த இப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி, அதற்கான முன்வைப்பு தொகையாக, மீஞ்சூர் அனைத்து வியாபாரிகள் பொது நலச்சங்கம் மற்றும் மீஞ்சூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் சுப்ரமணியன் சார்பில், தலா 2 லட்சம் ரூபாய்க்கான காசோலை, நேற்று பள்ளி நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது.

பள்ளி பொறுப்பாசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் அதை பெற்றுக் கொண்டனர்.

இதுகுறித்து மீஞ்சூர் அனைத்து வியாபாரிகள் பொதுநலச்சங்கத்தின் செயலர் டி.ஷேக் அகமது கூறியதாவது:

பத்தாம் வகுப்பு முடிக்கும் மாணவர்களுக்கு, மேல்நிலை கல்வி எட்டா கனியாக இருக்கிறது. தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் செலுத்தி படிக்க முடியாத நிலைக்கு ஆளாகின்றனர். இப்பள்ளியை தரம் உயர்த்துவதன் வாயிலாக, மீஞ்சூர் மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயன்பெறுவர்.

இந்த கல்வியாண்டிலேயே மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பொன்னேரிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வந்த தமிழக முதல்வரிடமும், இதுதொடர்பாக மனு அளித்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement