பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை பிரதமர் மோடி மீண்டும் திட்டவட்டம்

3

புதுடில்லி: பயங்கரவாதிகளுக்கு எதிராக தீர்க்கமான நடவடிக்கை எடுப்பது உறுதி என, பிரதமர் நரேந்திர மோடி நேற்று மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளார்.

ஜம்மு - -காஷ்மீரின் பஹல்காமில் சமீபத்தில் பாக்., பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பாக்.,கில் செயல்படும் 'லஷ்கர் -- -இ- - தொய்பா' பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான, 'தி ரெசிஸ்டன்ஸ் பிரன்ட்' இதற்கு பொறுப்பேற்றது.

இந்த பயங்கரவாதிகளில் சிலர், பாக்., ராணுவத்தில் பயிற்சி பெற்றவர்கள் என்பதை, நம் புலனாய்வு அமைப்பு கண்டுபிடித்துள்ளது.

இதையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பீஹாரில் கடந்த வாரம் பேசிய பிரதமர் மோடி, 'பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகளையும், அவர்களுக்கு ஆதரவு அளிப்பவர்களையும் உலகின் எந்த மூலைக்கும் பின்தொடர்ந்து சென்று ஒழிப்போம்' என்றார்.

இந்நிலையில், தன் சூளுரையை பிரதமர் மோடி நேற்று மீண்டும் உறுதிப்படுத்தினார்.

ஆப்ரிக்க நாடான அங்கோலாவின் அதிபர் ஜோவாவ் லவுரன்கோ, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். டில்லியில் நேற்று அவர், நம் பிரதமர் மோடியை சந்தித்தார்.

அப்போது, இரு நாட்டு உறவு, வர்த்தக மேம்பாடு உள்ளிட்டவை குறித்து இருவரும் பேசினர். அதைத் தொடர்ந்து, இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, பிரதமர் மோடி கூறுகையில், “பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனத்தையும், உயிரிழந்தவர்களுக்கு இரங்கலையும் தெரிவித்த அங்கோலா அதிபருக்கு நன்றி. ஒட்டுமொத்த மனித இனத்துக்கும் பெரிய அச்சுறுத்தலாக பயங்கரவாதம் உள்ளது.

''எனவே, பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவு அளித்து ஊக்குவிப்பவர்களுக்கு எதிராக, மிக உறுதியான மற்றும் தீர்க்கமான நடவடிக்கையை எடுக்க இந்தியா உறுதி பூண்டுள்ளது,” என்றார்.

Advertisement