வடிகால் வசதி இல்லாததை கண்டித்து கடலுார் அருகே சாலை மறியல்

கடலுார்: சேடப்பாளையத்தில் நான்கு வழிச்சாலையில் மழைநீர் வடிகால் வாய்க்கால் வசதி ஏற்படுத்தக் கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

கடலுார்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பச்சையாங்குப்பம் முதல் விருத்தாசலம் வரை 47 கி.மீ., துாரம் 226 கோடி ரூபாய் மதிப்பில் நான்கு வழிச்சாலையாக மாற்றப்படுகிறது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

கடலுார் அடுத்த சேடப்பாளையத்தில் மரங்களை வெட்டி சாலை அகலப்படுத்தும் பணிகள் நடக்கிறது. சாலை இரு புறமும் வடிகால் வசதிகள் இல்லாமல் சாலை அமைக்கப்படுவதால் மழை நீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, வடிகால் வாய்க்கால் வசதி ஏற்படுத்த வேண்டுமென, கோரிக்கை விடுத்தனர்.

ஆனால், இது பற்றி கண்டு கொள்ளாமல் சாலை விரிவுப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடந்தது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சேடப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே நேற்று காலை 10:30 மணிக்கு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த கடலுார் முதுநகர் இன்ஸ்பெக்டர் ரேவதி சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியும் பொதுமக்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை.

தொடர்ந்து, தாசில்தார் மகேஷ், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மழைநீர் வடிகால் ஏற்படுத்தப்படும் என உறுதியளித்தனர். இதனையேற்று 11:00 மணிக்கு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியல் காரணமாக கடலுார்-திருச்சி சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement