மாவட்டத்தில் புதிய பஸ் ஸ்டாண்டுகள் திறப்பு எப்போது

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பல ஆயிரம் மக்கள் தினமும் மாவட்டத்திற்குள்ளும், பிற மாவட்ட நகரங்களுக்கும் தங்கள் தொழில், கல்வி, வேலை வாய்ப்புக்காக பயணித்து வருகின்றனர். அதிலும் தற்போது பள்ளி தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் சொந்த ஊர்களுக்கும், ஆன்மிக நகரங்களுக்கும் மக்கள் சென்று வருகின்றனர்.
இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பஸ் ஸ்டாண்டுகளிலும் பயணிகள் எண்ணிக்கை ஒரு மடங்கு அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் தற்போது ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம், அருப்புக்கோட்டை நகரங்களில் புதிய பஸ் ஸ்டாண்டுகள் கட்டுமான பணிகள் பல மாதங்களாக நடந்து வருகிறது. இதில் அருப்புக்கோட்டை, ராஜபாளையம் நகரங்களில் ஏற்கனவே இருந்த பஸ் ஸ்டாண்டுகளின் பழைய கட்டடங்களை இடித்து விட்டு புதிதாக கட்டடங்கள் கட்டும் பணி நடந்து வருகிறது.
இதற்காக அந்த பஸ் ஸ்டாண்டுகளில் இருந்து புறப்படும் பஸ்கள் நகரின் வெவ்வேறு இடங்களில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் ரோட்டோரங்களில் கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் நிற்கின்றனர். ஸ்ரீவில்லிபுத்துாரில் மட்டும் புதிதாக கட்டப்பட்டு வரும் பஸ் ஸ்டாண்டில் பெரும்பாலான பணிகள் முடிந்துள்ள நிலையில் இன்னும் ரோடுகள் அமைத்தல், காம்பவுண்ட் சுவர் கட்டுதல் பணிகள் முழுமை அடையாமல் உள்ளது.
இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்துார் தற்போதைய பஸ் ஸ்டாண்டில் தற்காலிக தகர செட்டு கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலான மதுரை, தேனி பஸ்கள் பஸ் ஸ்டாண்டிற்குள் வராமல் சர்ச் சந்திப்பில் மக்களை இறக்கி விட்டு செல்கின்றனர்.
ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் இன்னும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் உள்ளது. இதனால் பஞ்சு மார்க்கெட்டில் இருந்து சொக்கர் கோயில் வரை ஆங்காங்கே உள்ள பஸ் ஸ்டாப்புகளில் மக்கள் காத்திருக்கின்றனர். இதில் ஒரு சில இடங்களில் பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டிருந்தாலும், சுகாதார வளாக வசதி இல்லாமல் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.
அருப்புக்கோட்டையிலும் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகள் பல மாதங்களாக ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இதனால் வெளிமாவட்டங்களில் இருந்து அருப்புக்கோட்டை வரும் மக்கள் அங்கிருந்து டவுன் பஸ் பிடித்து சுற்றுவட்டார கிராமங்களுக்கு செல்வதில் தினமும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இந்த மூன்று நகரங்களில் பல மாதங்களாக நடக்கும் கட்டுமான பணிகள் கடந்த ஏப்ரல் மாதமே முடிக்கப்பட்டு, மே மாதம் முதல் வாரத்தில் புதிய பஸ் ஸ்டாண்டுகள் செயல்பாட்டுக்கு வருமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வரை அதற்கான அறிகுறிகளே தென்படவில்லை.
சரியான திட்டமிடல், தொடர் கண்காணிப்பு இல்லாமலும், மக்கள் பிரதிநிதிகளும், மாவட்ட அரசு நிர்வாகத்தின் அலட்சியப் போக்கும் மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கொளுத்தும் கோடை வெயிலில் மக்கள் பரிதவிப்புடன் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜூன் முதல் வாரத்தில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் மே மாத இறுதிக்குள் அனைத்து பணிகளையும் முடித்து புதிய பஸ் ஸ்டாண்டுகளை செயல்பாட்டிற்கு கொண்டு வர மக்கள் பிரதிநிதிகளும், மாவட்ட அரசு நிர்வாகமும் அக்கறையுடன் செயல்பட வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும்
-
அப்பாவி மக்களை கொன்றவர்களை ராணுவம் அழித்துள்ளது: ராஜ்நாத் சிங்
-
சி.பி.ஐ., இயக்குநர் பிரவீன் சூட் பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு
-
இந்திய படைகளுக்கு காங்., முழு ஆதரவு: ராகுல் பேட்டி
-
'ஆபரேஷன் சிந்துார்' குறித்து இந்திய ராணுவம் சொன்ன 10 முக்கிய விஷயங்கள் இவை தான்!
-
எல்லையில் பதற்றம்; மும்பை - பஞ்சாப் லீக் போட்டி மாற்றம்
-
பாக்., தாக்கினால் உரிய பதிலடி தரப்படும்: தோவல் உறுதி